tamilnadu

img

நவீன காலத்தின் கொடிய விளைவு மக்களை அச்சுறுத்தும் நோய்க்கூட்டம்!

உலகமயமாக்கலின் விளைவாக மாறிவரும் வாழ்க்கை முறையால் ஏற்படும் கார்டியோவாஸ்குலர் கிட்னி மெட்டபாலிக் (CKM) நோய்க்கூட்டம்  - அதாவது, இதய - சிறுநீரக - சர்க்கரை சார்ந்த பல்வேறு நோய்கள் தமிழக மக்களை அச்சுறுத்தி வருவதாக மருத்துவ நிபுணர்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர்.

அதிகரிக்கும் நோயாளிகள்

உலக நீரிழிவு நாளான நவம்பர் 14 அன்று தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் இதுதொடர்பாக மருத்துவர்கள் விரிவான கட்டுரை எழுதியுள்ளனர். அதில்,  மதுரை மருத்துவக் கல்லூரியின் நெஃப்ரோலஜி பேராசிரியர் டாக்டர் சக்திராஜன் ராமானுஜம் கூறுகையில், “உடல் பருமன், இதய நோய், சிறுநீரக கோளாறுகள் என அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய பிரச்சனைகள். ஆரம்பத்தில் உடல் எடை மற்றும் இடுப்பு சுற்றளவு அதிகரிப்பு ஏற்பட்டு, படிப்படியாக உடலின் முக்கிய உறுப்புகளை பாதிக்கிறது. இது இறுதியில் முன்கூட்டியே மரணத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது” என்று எச்சரிக்கிறார்.

அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்

2020-ம் ஆண்டு தமிழ்நாடு STEPS ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன:
* 25.5% மக்கள் - அதிக உடல் எடை
* 16.4% மக்கள் - உடல் பருமன்
* 33.9% மக்கள் - உயர் இரத்த அழுத்தம்
* 17.6% மக்கள் - நீரிழிவு நோய்

“ஏழை மக்களிடையே விழிப்புணர்வு குறை வாக உள்ளது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர் களில் 24% ஆண்களும், 21% பெண்களும் சரியான சிகிச்சை பெறாமல் உள்ளனர்” என்று டாக்டர் சக்திராஜன் மேலும் தெரிவிக்கிறார்.

பொருளாதார சுமை

எஸ்ஆர்எம் மருத்துவமனையின் உதவி பேராசிரியர் டாக்டர் தமிழ் மோசஸ் லாரன்ஸ் கூறுகையில், “தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 1,200 கோடி ரூபாய் இந்நோய்களுக்கான சிகிச்சைக்காக செலவிடப்படுகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1.4 கோடி குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இருப்பினும், காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிக்கிறது” என்கிறார்.

காரணங்களும் தீர்வுகளும்

“நீண்ட வேலை நேரம், இரவு ஷிப்ட் வேலை, தவறான உணவு பழக்கங்கள், உடல் உழைப்பின்மை ஆகியவை இந்நோய்களுக்கு முக்கிய காரணங்கள். அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவுகள், செயற்கை உணவுப் பொருட்கள் பயன்பாடு, மன அழுத்தம்,  குறைவான தூக்கம் போன்றவையும் இந்நோய் களை தூண்டுகின்றன” என்று டாக்டர் தமிழ்மோசஸ் விளக்குகிறார். அமெரிக்க இதய சங்கம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், “ஒருங்கிணைந்த மருத்துவ மையங்கள் மூலம் மட்டுமே இந்த பிரச்சனையை முழுமையாக சமாளிக்க முடியும். நீரிழிவு நிபுணர், இதய நிபுணர், சிறுநீரக நிபுணர்,  உடற்பயிற்சி நிபுணர் அனைவரும் ஒருங்கிணை ந்து செயல்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.

அரசின் முயற்சிகள்

தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது:
l முத்து லட்சுமி ரெட்டி திட்டம் மூலம் கர்ப்பிணி களுக்கு ஊட்டச்சத்து
l பள்ளி குழந்தைகளுக்கு தொடர் உடல் பருமன் கண்காணிப்பு
l பொது விநியோக திட்டத்தின் கீழ் குறைந்த கிளை செமிக் செறிவு கொண்ட அரிசி விநியோகம்
l மருத்துவக் காப்பீட்டு திட்டங்கள் விரிவாக்கம்.
 

எதிர்கால இலக்கு

2030-ம் ஆண்டுக்குள் தொற்றா நோய் மரணங்களை மூன்றில் ஒரு பங்காக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக:
l வேலை நேர ஒழுங்குமுறைகள்
l பொது சுகாதார விழிப்புணர்வு
l ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகள்
l ஆரோக்கியமான உணவு பழக்கங்களை ஊக்குவித்தல்
l தொடர் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி ஆகிய
வற்றை செயல்படுத்த வேண்டியதன் அவசி
யத்தை மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்து கின்றனர்.