செருகுடியில் கட்டி முடிக்கப்பட்ட கழிவறை
வாலிபர் சங்கம் முயற்சியால் திறந்து வைப்பு
கும்பகோணம், செப். 29- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செருகுடி கிராமத்தில், மகளிர் மற்றும் குழந்தைகள் பொது கழிவறை புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில், கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கிராமத்தில் புதிய கழிப்பறை கட்டப்பட்டு நீண்ட நாட்களாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி கிடந்தது. இதுகுறித்து, திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய இந்திய வாலிபர் சங்கத்தினரிடம் பொதுமக்கள் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து, செருகுடி கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படாத நிலையில் உள்ள கழிவறை வாலிபர் சங்கத்தின் செருகுடி கிளை சார்பில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் வழங்கி நூதன போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பாக, திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலர், இந்திய வாலிபர் சங்க பொறுப்பாளர்களான ஒன்றியத் தலைவர் பிரேம்நாத், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் சத்யப்பிரியன், துணைத் தலைவர் அன்பு, கிளைத் தலைவர் அழகன், செயலாளர் ராஜ், பொருளாளர் திவாகரன் உள்ளிட்ட வாலிபர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில் திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இரண்டு நாட்களில் மீதமுள்ள வேலையை முடித்துவிட்டு, பொதுமக்கள் பயன்பட்டிற்கு வாலிபர் சங்கம் முன்னிலையில் திறந்து விடப்படும் என்று கூறினர். அதன்படி, செப்.29 (திங்கள்) அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிதாக கட்டிய கழிவறை திறந்து விடப்பட்டது. இந்நிலையில் மக்களுக்கான சேவையை தொடர்ந்து செய்து வரும் இந்திய வாலிபர் சங்க திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்களை, பொதுமக்கள் பாராட்டி, போராட்டம் வெற்றி பெற்றதாக நன்றி தெரிவித்தனர்.
