மக்களின் கோபத்தை அதிகார வர்க்கம் இனி புறக்கணிக்க முடியாது!
சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி நேர்காணல்
மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, ஏழை எளிய மக்கள் மீதும் உழைக்கும் வர்க்கத்தின் மீதும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் சீர்குலைக்கப்படுவது முதல், தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி ‘தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக’ மாற்றுவது வரை பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகின்றது. இந்தச் சூழலில், மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டவும் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி நாடு தழுவிய அளவில் ‘ஜன ஆக்ரோஷ்’ (Jan Akrosh) பேரணி மற்றும் மாநில அளவிலான பிரச்சாரப் பயணங்களை ஒருங்கிணைத்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி அவர்கள் ‘லெஃப்ட் லென்ஸ்’ (Left Lens) ஊடகத்திற்கு அளித்த விரிவான நேர்காணல் இதோ:
கேள்வி: நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத் தில் சட்டமன்றத் தேர்தல் அறி விக்கப்பட்டுள்ள நிலையில், வட இந்திய மாநிலங்களில் இந்த பிரச்சாரப் பயணங்களும் பேரணியும் நடைபெறுகின் றன. ஆனால், தேர்தல் நடக்கும் எந்த மாநிலத்திலும் இந்தப் பேரணி நடத்தப்பட வில்லையே, ஏன்? பதில்: கடந்த ஜனவரி மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற எங்களது மத்தியக்குழுக் கூட்டத்தின் போதே, நரேந்திர மோடி அரசு பல்வேறு தரப்பு மக்கள் மீது, குறிப்பாக ஏழையிலும் ஏழையாக உள்ள மக்கள் மீது தொடுத்துள்ள தாக்குதல்கள் குறித்து விவாதித்தோம். 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்துவோம் என்று கூறிவிட்டு, நடைமுறையில் அந்தத் திட்டத்தையே அவர்கள் சீர்குலைத்து வருகின்றனர். இது ஆர்எஸ்எஸ் பயிற்சி பெற்றவர்கள் கையாளும் ஒரு தந்திரமான சூழ்ச்சி. அடுத்ததாக, தொழிலாளர் உரிமைகள் மீதான தாக்குதல். ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், தொழிலாளர்களை அதானி, அம்பானி போன்ற முதலாளிகளின் அடிமைகளாக மாற்றும் விதத்தில் உள்ளன. மின்சார மசோதா நுகர்வோரையும், விவசாயிகளையும் பாதிக்கிறது. விதைகள் மசோதா மற்றும் பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் விவசாயத் துறை சீர்குலைக்கப்படுகிறது. இத்தகைய சூழலில், ஒரு தொழிலாளர் வர்க்கக் கட்சி, உழைப்பாளி வர்க்கத்தை அணி திரட்ட வேண்டியது அவசியமான கடமை ஆகும். அதனால்தான் ஜம்மு-காஷ்மீர் முதல் ஜார்க்கண்ட் வரை இந்த பிரச்சாரப் பயணங்களை ஒருங்கிணைத்து, கடைக்கோடி மனிதரை யும் சென்றடையத் தீர்மானித்தோம். தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், தேர்தல் பிரச்சா ரத்தின் ஒரு பகுதியாக இந்த பிரச்சனைகளை நாங்கள் மக்களிடம் கொண்டு செல்கிறோம். கேள்வி: இந்த பிரச்சாரப் பயணங்கள் மற்றும் பேரணி மூலம் கட்சி எதை அடைய விரும்புகிறது? இதன் இறுதி இலக்கு என்ன? பதில்: இந்த அநீதிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்பதே இதன் இறுதி இலக்கு. இதற்கு முன்பு ஒன்றிய அரசு கொண்டு வந்த விவசாய விரோதச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய தீரம் மிக்க போராட்டத்தை நாம் பார்த்தோம். ஐக்கிய கிசான் மோர்ச்சாவின் கீழ் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் அமைப்புகளின் தலைவர்கள் முன்னணியில் நின்றனர். ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்த அந்தப் போராட்டத்தின் விளைவாகவே மோடி அரசு அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டியிருந்தது. அதே போன்றதொரு மக்கள் இயக்கத்தை உருவாக்குவதே எங்களது நோக்கம். எங்களது பிரச்சாரப் பயணங்களின் போது, செங்கொடி வலுவாக இல்லாத குஜராத் போன்ற மாநிலங்களில் கூட மக்கள் எங்களை மீண்டும் வருமாறு அழைக்கிறார்கள்.
சத்தீஸ்கரில் கனிம வளங்கள் நிறைந்த நிலங்களை முதலாளிகளுக்குத் தாரை வார்ப்பதை மக்கள் எதிர்க்கிறார்கள். வட இந்தியாவில் பல பகுதிகளில் செங்கொடியைக் கண்டவுடன் மக்கள் தானாகவே முன்வந்து எங்களுடன் இணைகிறார்கள். இது வரும் காலங்களில் ஒரு வலுவான வர்க்கப் போராட்டத்தைக் கட்டியெழுப்ப உதவும். கேள்வி: நீங்கள் நேரில் சென்ற பிரச்சாரப் பயணங்களில் உங்களது அனுபவம் எப்படியிருந்தது? பதில்: நான் உத்தரப் பிரதேசத்தில் வாரணாசிக்கு அருகிலுள்ள சக்கியா பகுதிக்குச் சென்றிருந்தேன். பிரதமர் மோடியின் தொகுதியிலேயே வறுமையின் கோரப் பிடியை என்னால் காண முடிந்தது. வாரணாசியில் உள்ள அன்னபூர்ணா கோவிலில் 300 ஆண்டுகளாகத் தடையின்றி அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு, வரலாற்றில் முதல்முறையாக அந்த அன்னதானத் திட்டம் நிறுத்தப்பட்டது. ஈரானின் மீதான இந்த ஒருதலைப்பட்சமான தாக்குதலை மோடி கண்டிக்கவில்லை. போரின் பாதிப்பு இன்று இந்திய கிராமங்களின் அடுப்பங்கரை வரை வந்துவிட்டது.
மேலும், 1982-இல் காங்கிரஸ் ஆட்சியின் போது வாழ்வாதாரப் போராட்டத்திற்காகப் பலியான 17 வயது மாணவர் லால் சந்த் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரின் நினை விடத்திற்குச் சென்றேன். அங்கு திரண்டிருந்த ஏழை மக்கள், நான் தவறான இந்தியில் பேசிய போதிலும், என் சொற்களை விட அந்தச் செங்கொடி தங்களது உரிமைகளுக்காக நிற்கிறது என்பதை உணர்ந்து ஆதரவு அளித்தனர். கலாச்சார தேசியம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் செய்யும் மூளைச்சலவையை முறியடிக்க, இந்தப் பயணங்களில் வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் மூலம் கலாச்சார ரீதியான எதிர்ப்பையும் நாங்கள் பதிவு செய்து வருகிறோம். கேள்வி: வேலை உறுதித் திட்டம் மற்றும் தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப் பெற விவசாயிகள் போராட்டம் போன்றதொரு நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படுமா? பதில்: லெனின் கூறியது போல, “சில பத்தாண்டுகளில் நடக்காத விஷயங்கள் சில வாரங்களில் நடக்கலாம்.” மக்கள் விழிப்புணர்வு அடைந்து வீதியில் இறங்கினால் எதுவுமே சாத்தியம்.
கேரளத்தில் உள்ள எல்டிஎப் அரசாங்கம், ஒன்றிய அரசின் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை அமல்படுத்த மாட்டோம் என்று துணிச்சலாக அறிவித்துள்ளது. அதேபோல, தமிழக அரசு ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்ய நீதிபதி குரியன் ஜோசப் குழுவை அமைத்துள்ளது. மறுபுறம் ஜம்மு-காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் கவர்னரிடம் கைதியாக இருக்கும் அவலம் நீடிக்கிறது. பாதுகாப்பு ஆய்வுக் கூட்டங்களுக்குக் கூட முதலமைச்சருக்கு அழைப்பு இல்லை. இது ஒரு மிக மோசமான சூழல். தொழிலாளர் சட்டம் மட்டுமல்ல, கூட்டாட்சித் தத்துவமே இன்று கேள்விக்குறியாகியுள்ளது.
வரவிருக்கும் நாட்கள் போராட்டக் களங்களாகவே இருக்கும். கேள்வி: மார்ச் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணியில் திரள் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? பதில்: ஜனவரி பாதியிலிருந்தே இதற்கான தயாரிப்புப் பணிகளைத் தொடங்கிவிட்டோம். கட்சியின் வட மாநிலச் செயலாளர்கள் மற்றும் மத்தியக் குழு உறுப்பினர்களுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. சுமார் 50,000 பேரைத் திரட்ட இலக்கு வைத்துள் ளோம். பாஜக அரசு ரயில்களைத் தடுத்து நிறுத்துவது போன்ற தடைகளை உருவாக்கலாம். இருப்பினும், செங்கொடிகளுடனும் பதாகைகளுடனும் ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்கள் தங்களது வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்வைத்து இந்தப் பேரணியில் பங்கேற் பார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் இனி மக்களின் கோபத்தைப் புறக்கணிக்க முடியாது.
