தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும்
சென்னை, அக். 16 - 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவு ஒன்று சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதனை கைவிட வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் உள்ளிட்டவற்றை, தனியார் பல்கலைக்கழகங் களாக மாற்றுகிற திருத்தம், சட்ட முன்வடிவில் இடம் பெற்றுள்ளது. மேலும் தனியார் பல்கலைக் கழகத்திற்கு குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்ற விதியும் தளர்த்தப்பட்டு, மாநகராட்சிப் பகுதிகளில் 25 ஏக்கர், நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் 35 ஏக்கர், இதர பகுதிகளில் 50 ஏக்கர் என குறைப்பதற்கும் வழி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்ட முன்வடிவு உயர்கல்வியை தனியார்வசம் மேலும் ஒப்படைப்பதாகவே அமையும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் வி.பி. நாகை மாலி மற்றும் துணைத்தலைவர் மா. சின்னதுரை ஆகியோர் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும், “கல்வியில் அரசின் பங்கும் ஒதுக்கீடுகளும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வரும் வேளையில், இத்தகைய சட்ட முன்வடிவு உயர்கல்வி மேம்பாட்டை பின்னோக்கித் தள்ளுவதாகவே அமையும்” என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். “அரசு உதவி பெறும் கல்லூரிகளும், தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படலாம் என்பது, அரசு பொதுநிதியில் இருந்து உருவாக்கப்பட்ட, வளர்த்தெடுக்கப்பட்ட கல்வி நிலையங்களை தனியார் லாப வேட்டைக்கு அனுமதிப்பதாகும். இது மக்கள் வரிப்பணத்தை தனியாருக்கு மடைமாற்றம் செய்வதே ஆகும்” என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு, கலைஞர் ஆட்சிக்காலத்தில் கோவை பிஎஸ்ஜி, மதுரை தியாகராசர் கல்லூரி ஆகிய அரசு உதவி பெறும் கல்லூரிகள் தொடர்பாக இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்ட தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் நினைவுபடுத்தி யுள்ளனர். “உயர்கல்வியில் தனியார் பிரவேசம் அதிகரிப்பது கல்விக்கட்டணங்கள் பெருமளவு உயர்வுக்கு வழிவகுக்கும். இது எளிய மக்களின் கல்வி உரிமை மீதான தாக்குதல் ஆகும். சமூக நீதிக்கான வாய்ப்புகளை சுருக்குவதோடு ஓபிசி, எஸ்சி, எஸ்டி மாணவர் அனுமதியின் எண்ணிக்கை மீது பாதிப்பை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் இடஒதுக்கீட்டையே பறிப்பதற்கே இட்டுச் செல்லும்” என்றும் எச்சரிக்கை செய்துள்ளனர்.