tamilnadu

img

நேபாளத்தில் உருவாக்கப்பட்ட பதற்றம் : ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் ராஜினாமா

நேபாளத்தில் உருவாக்கப்பட்ட பதற்றம் : ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் ராஜினாமா

காத்மண்டு, செப்.9 - நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பவுடல், பிரதமர் கே.பி.சர்மா ஒலி மற்றும் சில அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.   அமெரிக்காவில் இருந்து இயங்கி வருகின்ற சமூக வலைதளங்களை நேபாள சட்டத்திற்குட்பட்டு அந்நாட்டில் பதிவு செய்ய மறுத்து வந்ததால் முகநூல், டிவிட்டர் எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்கள் நேபாளத்தில் தடை செய்யப்பட்டன. இதனால் கடந்த இரு நாட்களுக்கு மேலாக இளைஞர்கள் தலைநகர் காத்மண்டு உட்பட பல நகரங்களில் பெரும் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அரசு தடையை நீக்கியது. ஆனால் போராட்டம் வன்முறையாக மாற்றப்பட்டது. இந்நிலையில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.   நேபாளத்தில்  ஜனநாயக அரசு வேண்டாம்; மீண்டும் மன்னராட்சியே வேண்டும் என அந்நாட்டின் ஐந்தாவது பெரிய கட்சியாக உள்ள ராஷ்ட்ரிய பிரஜா தந்திரக் கட்சியினர் (RPP) தொடர்ந்து பிரச்சாரம் செய்து நாட்டுக்குள் குழப்பத்தை உருவாக்கி வருகின்றனர்.  இக்கட்சியானது அந்நாட்டின் முன்னாள் மன்னரான ஞானேந்திரா பீர் பிக்ரம் ஷாவின் தீவிர ஆதரவு மற்றும் மதவாதத்தை முன்னிறுத்தி வருகின்ற அமைப்பாகும். இவ்வமைப்பின் தலைவ ராக உள்ள ராஜேந்திர லிங்டன் கடந்த சில ஆண்டுகளாகவே ஜனநாயக ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக ஊடக தடைக்கு எதிராக வெடித்த பெரும் போராட்டத்தை அவர்கள் ஆட்சிக்கவிழ்ப்புக்கு பயன் படுத்தி இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.   தற்போதைய வன்முறையில் நாடா ளுமன்றம், பிரதமர், அமைச்சர்களின் இல்லங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஜலாநாத் கானலின் மனைவி ரபிலட்சுமி பலியாகியுள்ளார். இந்த சம்பவங்களை தொடர்ந்து பிரதமர் கே.பி. சர்மா ஒலி வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர்களின் அமைதியான போராட்டத்தில் சமூக விரோத சக்திகளின் ஊடுருவலால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. அப்பாவி குடிமக்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த வன்முறைச் சம்பவங்கள், அதன் பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து முழுமையாக விசாரிக்க தனி விசாரணைக் குழு அமைக்கப்படும். அக்குழு 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதன் பிறகே அவர் தனது பதவி விலகல் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.