மோசடி நிலத்தை மீட்டு பொதுமக்களுக்கு வழங்க வரியுறுத்தல்
கரூர், ஜூலை 31- அரசு நிலத்தை போலி பட்டா, பத்திர பதிவு செய்து, குளித்தலையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் கடை நடைபெற்று வருகிறது. மோசடி நிலத்தை மீட்டு பொதுமக்களுக்கு வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா. முத்துச்செல்வன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம் குளித்தலை நகரம், நம்பர் 8, ஆண்டார் மெயின் ரோட்டில் உள்ள சிவா டெக்ஸ்டைல் ஜவுளிக்கடை, அரசு நத்தம் புறம்போக்கு 2.59 ஹெக்டர் நிலத்தை ரவிச்சந்திரன் என்பவரின் மனைவி அமுதா பெயரில் போலி ஆவணங்கள் தயார் செய்து, அரசு நிலத்தை அபகரித்து பிரம்மாண்டமான அடுக்குமாடி கட்டிடம் கட்டி ஜவுளிக்கடை நடத்தி வருகின்றனர். மேற்கண்ட சர்வே எண்ணில் உள்ள அரசு நத்தம் புறம்போக்கு நிலம் சம்பந்தமாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிமன்ற வழக்கு எண் W. P. (MD) NO. 3189 OF 2025) தீர்ப்பில் இந்த நிலத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே உடனடியாக மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி, மேற்கண்ட சர்வே எண்ணில் உள்ள போலி பட்டா, பத்திர பதிவை ரத்து செய்தும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்தும், சிவா டெக்ஸ்டைல் ஜவுளி கடையை இடித்துவிட்டு அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தை மீட்டு, குளித்தலை நகரத்தில் குடியிருக்க வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு அந்த இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட கரூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றிய குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.