tamilnadu

அன்றாட வரி மாற்றத்தால் பெரும் இன்னல்களில் தொழில் வணிகத்துறையினர்: ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஜிஎஸ்டி வரி முறையை மறு சீரமைப்பு செய்திடுக!

மதுரை, ஏப். 3 - அன்றாடம் சரக்கு மற்றும் சேவை வரி முறையில் செய்யப்பட்டு வரும் மாறுதல்கள் மற்றும் திருத்தங்கள் காரணமாக தொழில் வணிகத் துறை மிகுந்த குழப்பத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. சரக்கு- சேவை வரி ஒரு நல்ல மற்றும் எளிய வரி என்ற இலக்கை எட்ட  ஜி.எஸ்.டி வரி முறையை ஒன்றிய அரசு மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் தொழில் வணிகத் துறையினர் மற்றும் வரி செலுத்துவோரின் நம்பிக்கையை பெறத்தக்க வகையில் ஜி.எஸ்.டி. நிர்வாகம் வெறும் வரி வசூலிப்பவராக மட்டுமே செயல்படாமல், தொழில் வணிகத் துறையினருடன் ஒருங்கி ணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலை வர் டாக்டர்  என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:

நம் நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) 1 ஜுலை  2017 அன்று தொடங்கப்பட்டது. ஜி.எஸ்.டி வரிமுறை இரட்டை வரி விதிப்புகளின் அடுக்கடுக்கான விளைவுகளைக் குறைக்கும்; சரக்கு மற்றும் சேவைகளின் மீதான ஒட்டு மொத்த வரிச்சுமையைக் குறைப்பதோடு, உள் நாடு மற்றும் சர்வதேச சந்தைகளில் நிலவும் போட்டித் தன்மை யை எதிர்கொள்ள உதவும்; பல்வேறு வரிகள் ஒருங்கி ணைக்கப்பட்டுள்ளதால் இந்த மறைமுகவரி எளிமைப் படுத்தப்படுவதோடு அதிக ஆட்டோமேஷனையும் கொண்டு வரும் என்று தொழில் வணிகத் துறையினரால்  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜி.எஸ்.டி அறிமுகமாகி சுமார் 5 ஆண்டுகளாகியும் அதன் நோக்கங்களை ஓரளவுதான்  எட்டியுள்ளது; ஜி.எஸ்.டியின் இலக்கான நல்ல மற்றும் எளிய வரி என்ற நிலையை முழுமையாக எட்ட ஜி.எஸ்.டி வரி முறை மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

நிவாரணம், வழிகாட்டுதல் இல்லை

ஜிஎஸ்டி வரி விகிதத்தை பகுப்பாய்வு செய்வது குறித்து  தற்போது அதிக கவனம் மற்றும் விவாதம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. 2021 செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 45வது கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது. சந்தேகத்திற்கு இடமின்றி, ஜிஎஸ்டி வரி  விகிதத்தை பகுப்பாய்வு செய்வது மிகவும் அவசியம். இந்தி யாவின் மக்கள்தொகை மற்றும் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி வரி விகிதம் 0,5,10,15 மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு 28 சதவிகிதம் என மாற்றி யமைக்கப்பட வேண்டும். நமது நாட்டின் ஜிஎஸ்டி (GST) வரி  விகிதங்களை ஐரோப்பிய நாடுகள் அல்லது சிங்கப்பூர்  வாட் (VAT) வரி உடன் ஒப்பிட முடியாது.

ஜி.எஸ்.டி வரி முறையில் தொழில் வணிகத்துறையின ரின் முக்கிய எதிர்பார்ப்பு, குறைந்த  வரி விகிதங்கள் மற்றும் வரி முறையை எளிதில் பின்பற்றி அவற்றை நடைமுறைப் படுத்துவதுதான். ஜி.எஸ்.டி வரி முறையில் வரி விதிப்பு பிரச்சனைகளை ஏஏஆர் (AAR) அணுகுமுறை மூலம் முன் கூட்டியே தீர்ப்புக்கு விண்ணப்பிக்கும் வசதி தொழில் வணிகத் துறைக்கு வழங்கப்பட்டிருந்தாலும், இந்த அணுகு முறை அரசின் வரி வருவாயை அதிகரிக்கவே பெரும்பாலும் வழி வகுப்பதால், தொழில் வணிகத் துறையினருக்கான நிவாரணமோ / தகுந்த வழிகாட்டுதல்களோ சரியாக வழங்கப்படவில்லை.

அதிகாரிகளின் நடவடிக்கையால் வழக்குகள்

மேலும், நேர்மையாக வரி செலுத்தும் தொழில் வணிகத் துறையினர் எதிர்கொள்ளும் எந்த சிரமத்தையும் தவிர்க்க, ஜிஎஸ்டி வரி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை நியாயமான முறையில் பயன்படுத்த வேண்டும். உள்ளீட்டு வரி வரவைத் தடுப்பது, உள்ளீட்டு வரி வரவு பொருத்தமின்மை, ஏற்றுமதி மீதான விளக்கம் தேவை என்று ஏதேதோ காரணம் காட்டி ஜிஎஸ்டி வரி அதி காரிகள் பின்பற்றும் சில நடைமுறைகள் மீது பெரும்பா லான ரிட் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வரி மோசடிகள் நடந்துள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆனால் இதுபோன்ற மோசடி வழக்குகளின் எண்ணிக்கை மிகச் சிறிய அளவுதான். தொழில் வணிகத் துறையில் பெரும் பாலான வரி செலுத்துவோர் சட்டத்தை முறையாகப் பின்பற்றுவதோடு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரியை யும் அரசிற்கு முறையாக செலுத்தி வருகின்றனர்.

வரி செலுத்துவோரின் நம்பிக்கையைப் பெற, ஜிஎஸ்டி  நிர்வாகம் வரி வசூலிப்பவராக மட்டுமே செயல்படாமல் தொழில் வணிகத் துறையுடன் ஒருங்கிணைப்பாளராக இணைந்து செயல்பட வேண்டும். தவறு செய்பவர்கள் மட்டுமே விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும். இல்லையெனில், நேர்மையாக சட்டத்தை பின்பற்றி முறையாக வரி செலுத்துவோரும் பாதிக்கப்படு வார்கள். வரி செலுத்துவோர் மேற்கொள்ளும் மோசடி நடைமுறைகளுக்கு ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் தண்டனை விதிகள் உள்ளன. ஜி.எஸ்.டி அதிகாரிகள் தேவையற்ற நோட்டீஸ்களை வழங்குவதன் மூலமோ அல்லது தவறான உத்தரவுகளை பிறப்பிப்பதன் மூலமோ பல ஆண்டு களாக வழக்குகள் தொடருவதால் தொழில் வணிகத்துறை யினருக்கு ஏற்படும் தேவையற்ற தொந்தரவுகளைத் தவிர்க்க ஜிஎஸ்டி வரி அதிகாரிகள் பொறுப்பேற்பதற்கும் இதே போன்ற விதிகள் உருவாக்கப்பட வேண்டும்.  வரி செலுத்துவோர் பின்பற்ற வேண்டிய பல இணக்க நடை முறைகள் உள்ளது போன்று, வரி விதிப்பு அதிகாரிகளுக் கும் இத்தகைய நடைமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டி யது மிகவும் அவசியம்.

ஜிஎஸ்டி வரி முறையில் அன்றாடம் செய்யப்பட்டு வரும்  மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் காரணமாக தொழில்  வணிகத் துறையினர் மிகுந்த இன்னல்களை எதிர்கொள்வ தால், ஜிஎஸ்டி வரி அமைப்பை மறுசீராய்வு செய்ய ஒன்றிய அரசை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலி யுறுத்துகிறது. மேலும் ஜி.எஸ்.டி நிர்வாகம் திறமையான வழி முறைகளுடன் தங்கள் மனநிலையிலும் ஒரு மாற்றத்தை மேற்கொண்டு, வரி செலுத்துவோருக்கும், வரித் துறையை நிர்வாகிக்கும் அதிகாரிகளுக்கும் ஜி.எஸ்.டியை நல்ல மற்றும் எளிய வரியாக மாற்றுவதற்கான முயற்சியையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.