tamilnadu

img

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள்  வேலைநிறுத்தப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 16-  களப் பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீண்டும் வழங்க வேண்டும். நில அளவைத் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் செவ்வாய் அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.  போராட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் மகேஷ் வரவேற்றார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட பொறுப்பாளர் ராம்குமார் பேசினார்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் பொன். மாடசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட நிர்வாகி கனகராஜ் நன்றி கூறினார்.  கரூர்  தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தின் கரூர் மாவட்ட குழு சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 48 மணிநேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் 40 ஊழியர்களும் கலந்து கொண்டனர்.   கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு. மகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ரா. மோகன்ராஜ் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மு. செல்வராணி, மாவட்டச் செயலாளர் பொன். ஜெயராம், மாவட்டத் தலைவர் எம்.எஸ். அன்பழகன், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் செ. முருகேசன், மாவட்டச் செயலாளர் வெ. தங்கவேல் ஆகியோர் உரையாற்றினர்.