tamilnadu

img

கும்பரம் விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்

கும்பரம் விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்

விவசாயிகள், கிராம மக்கள் 2 ஆயிரம் பேர் திரண்டு போராட்டம்

இராமநாதபுரம், செப். 8 - இராமநாதபுரம் மாவட்டம் மண்ட பம் ஊராட்சி ஒன்றியம் கும்பரம் ஊராட்சி பகுதியில் விமான நிலையம் அமைப்பதை கைவிடக் கோரி, தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலப் பொதுச்செய லாளர் சாமி. நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலத் துணைச் செயலாளர் டி. கண்ணன், மாவட்டத் தலைவர் எம். முத்துராமு, மாவட்டச் செயலாளர் வி.  மயில்வாகனன், இராமநாதபுரம் தாலுகா செயலாளர் பி. கல்யாண சுந்தரம், தெற்குவாணிவீதி கிராமத் தலைவர்கள் சி. சிவானந்தம், பி. கோவிந்தராஜ் கும்பரம் கிராமத் தலை வர்கள் பி. ஆறுமுகம், கே. இராஜேந்தி ரன், ஜி. ராஜேஸ்வரி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலாளர் ஆர். குருவேல், இராமநாதபுரம் தாலுகா செயலாளர் என். வெங்கடேஷ், சிஐடியு மாவட்டச் செயலாளர் எம். சிவாஜி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் நா. கலையரசன், ராமன் வலசை, தெற்கு வாணி வீதி, பூசாரி வலசை, ஏ.டி.நகர், கோகுல் நகர், கல்கண்டு வலசை, கிருஷ்ணா நகர், கும்பரம் வடக்கு, கும்பரம் தெற்கு, படை வெட்டி வலசை, மணியக்கார வலசை கிராமங்களைச் சேர்ந்த 800 பெண்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

5 லட்சம் பனை, தென்னை மரங்கள் வெட்டி அழிக்கப்படும் ஆபத்து! சாமி

. நடராஜன் பேட்டி கும்பரம் விமான நிலைய திட்ட எதிர்ப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை யொட்டி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  கும்பரம் பகுதியில் சுமார் மூன்று லட்சம் தென்னை மரங்களும், லட்சக்கணக்கான பனை மரங்களும் உள்ளன. கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துப் பயிர் வகை பயிர்களும் பயிரிடப்படுகின்றன. மண் வளம் நிறைந்த இந்தப் பகுதியை, விமான நிலையம் அமைக்க தேர்வு செய்துள்ளனர். மேலும், விமான நிலையத்திற்காக, 510 ஏக்கர் அளவிற்கு விவசாயிகளின் பட்டா நிலங்களையும், குளம், குட்டை போன்ற நீர்நிலைகளையும் கையகப்படுத்தப் போவதாகவும் தகவல் வருகிறது. இந்தப் பகுதி சாதாரண சிறு, குறு விவசாயிகள் என ஐந்து ஆயிரம் பேர் வாழக்கூடிய பகுதி ஆகும். ஆகவே, இந்தப் பகுதியை விமானநிலையத்திற்கு தேர்வு செய்வதைக் கைவிட்டு மாற்று ஏற்பாடுகளை யோசிக்க வேண்டும்.  இராமநாதபுரம் மாவட்டத்திலேயே, பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை, கார்ப்பரேட் முதலாளிகளுக்காக அரசே கையகப்படுத்தி வழங்கியுள்ளது. கமுதி அருகே அதானி சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்திற்கு 7000 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டது. அதுபோல உப்பளம் நிறுவனங்கள் நடத்தப்பட்டு, பின்னர் கைவிடப்பட்ட உப்பள நிலங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்லாயிரம்  ஏக்கர்கள் உள்ளன. எனவே, இந்த நிலங்களில் விமான நிலையம் அமைப்பது பற்றி அரசு சிந்திக்க வேண்டும். இராமேஸ்வரம் தீவுப் பகுதியிலும் கூட விமான நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யலாம். மாறாக, விவசாய நிலங்களை அழித்து  விமான நிலையம் அமைப்பதை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவ்வாறு சாமி. நடராஜன் கூறினார்.