கோவில்பத்து கிராமத்தில் 12 அடி உயர தீண்டாமை சுவர் அகற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்
திருவாரூர், செப். 9 - திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சியின் 14ஆவது வார்டான கோவில்பத்து கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட பட்டியல் சமூக குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை அடைத்து 12 அடி உயரத்தில் 300 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் நடத்தும் ஜாபர் அலி என்பவர் 10 அடி அகலம் கொண்ட பொதுப்பாதையை அடைத்து இந்த சுவரை எழுப்பியுள்ளார். வருவாய்த்துறையின் நிலவியல் வரைபடத்திலும் இது பொதுப்பாதையாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டியல் சமூக மக்கள் அப்பகுதி வழியாக செல்வதைத் தடுப்பதற்காகவே இந்த சுவர் அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. சுவர் எழுப்பியவர் நான்கு பக்கங்களிலும் சுவர் எழுப்பாமல், பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியை மட்டும் மறைத்து சுவர் எழுப்பியிருப்பது தீண்டாமை நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் இதுதொடர்பான பிரச்சனையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 26 அன்று வலங்கைமான் வட்டாட்சியர் நிர்வாகம் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தீண்டாமை சுவர் அகற்றப்பட வேண்டும் என்ற போராட்டம் ஒருங்கிணைத்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கே.முரளி மீது ஜாபர் அலியின் தூண்டுதலின் பேரில் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் க.சுவாமிநாதன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் பழ.வாஞ்சிநாதன், மாநில செயலாளர் ஆர்.கலைச்செல்வி, மாவட்டச் செயலாளர் கே.தமிழ்மணி, சிபிஐ(எம்) மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி ஆகியோர் முரளி மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அரசு அதிகாரிகளை சந்தித்து மனு தொடர்ந்து செப்டம்பர் 8, 2025 அன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தோழர் முரளி மற்றும் அவர் குடும்பத்தினரைத் தாக்கியவர்கள் மீது உடனடியாக நன்னிலம் டிஎஸ்பியை விசாரணை அதிகாரியாக நியமித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மாவட்ட ஆட்சியர் ஆரம்பத்தில் “தனிநபர் பட்டா இடத்தில் சுவர் எழுப்பியது தீண்டாமை சுவர் எப்படி?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முன்னணி தலைவர்கள், “இரவோடிரவாக பட்டியல் சமூக மக்கள் செல்லும் பாதையையும் அடைத்தது திட்டமிட்ட தீண்டாமைக் கொடுமையே” என்று விளக்கினர். இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பில் சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரகுநாதன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் ஆர்.கலைச்செல்வி, மாவட்ட தலைவர்கள் கே.தமிழ்மணி, கே.முரளி, பத்மநாபன், விவசாய தொழிலாளர் சங்க வலங்கைமான் ஒன்றிய செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விபரத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு மற்றும் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.