அரசின் கூடுதல் செலவுக்கு ரூ. 2,915 கோடி முதல் துணை மதிப்பீடுகள் தாக்கல்
சென்னை, அக். 15 - தமிழ்நாடு சட்டப்பேரவையில் புத னன்று (அக்.15) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026ஆம் ஆண்டு ஏற்பட்ட கூடுதல் செலவுக்கான முதல் துணை மதிப்பீடுகளை தாக்கல்செய்தார். அப்போது, 2025-2026 ஆம் ஆண்டிற் கான முதல் துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ. 214.99 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன. 2025-2026 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, புதிய பணிகள் மற்றும் புதிய துணைப் பணி கள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலைப் பெறுவதும், எதிர்பாராச் செலவு நிதியில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ள தொகையினை அந்நிதிக்கு ஈடுசெய்வதும் இத்துணை மானியக் கோரிக்கையின் நோக்கமாகும் என்றார். அரசு போக்குவரத்துக் கழகங் களில் பணிபுரிந்து இயற்கை எய்திய ஓய்வு பெற்ற மற்றும் தன்விருப்ப ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு உரிய ஓய்வூதியப் பணிப்பலன்களை வழங்கிட, வழிவகை முன்பணமாக ரூ.1,137.97 கோடியை அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை துணை மதிப்பீடுகளில் மானியக் கோரிக்கை எண் 48 போக்குவரத்துத் துறை என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஏற்பட்ட பெஞ்சால் புயல் பாதிப்புகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 2025-2026ஆம் ஆண்டு பெறப்பட்ட உதவித்தொகை ரூ.822.34 கோடியை மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றம் செய்ய அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை, துணை மதிப்பீடுகளில் மானியக் கோரிக்கை எண் 51 இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பழைய பேருந்துகளுக்குப் பதிலாக 3 ஆயிரம் புதிய பி.எஸ்.6 வகை பேருந்துகளை 2025-2026ஆம் ஆண்டில் வாங்குவதற்காக பங்கு மூலதன உதவியாக ரூ.471.53 கோடியை கூடுதலாக அரசு அனுமதித்துள்ளது. இதற்காக துணை மதிப்பீடுகளில் ரூ.1,000 மானியக் கோரிக்கை எண் 48 போக்குவரத்துத் துறை என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. மீதத்தொகை மானியத்தில் ஏற்படும் சேமிப்பில் இருந்து மறுநிதி ஒதுக்கத்தின் மூலம் செலவிடப்படும் என்றும் 2025-2026ஆம் ஆண்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்துவதற்காக கூடுதல் தொகை ரூ.469.84 கோடியை அரசு அனுமதித்துள்ளது. இதற்காக துணை மதிப்பீடுகளில் மானியக் கோரிக்கை எண் 42 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை என்பதன் கீழ் ஒவ்வொரு இனத்தின் கீழும் ரூ.1,000 சேர்க்கப்பட்டுள்ளது. மீதத்தொகை மானியத்தில் ஏற்படும் சேமிப்பில் இருந்து மறுநிதி ஒதுக்கத்தின் மூலம் செலவிடப்படும் என்றும் கூறினார்.