சென்னை,மார்ச் 24- ரூபாய் 10,567 கோடி ஒதுக்கீடு செய்வ தற்கான இறுதி துணை மதிப்பீடுகளை சட்டப்பேரவையில் வியாழனன்று(மார்ச் 24) நிதியமைச்சர் தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,“ இந்தத் துணை மதிப்பீடுகள் மொத்தம் 10,567.01 கோடி ரூபாய் நிதி ஒதுக்கத்திற்கு வகை செய்கின்றன. இதில், 8,908.29 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும் 1,658.72 கோடி ரூபாய் மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும்” என்றார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதியன்று முதல் துணை மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் “புது ப்பணிகள்” மற்றும் “புது துணைப்பணிகள்” குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவி னங்களுக்கு பேரவையின் ஒப்புதலைப் பெறுவது இத்துணை மதிப்பீடுகளின் முக்கிய நோக்கமாகும் என்றும் அமைச்சர் தெரி வித்தார்.
நகைக் கடன் தள்ளுபடிக்காக ரூ, 1,215.58 கோடி, 15 ஆவது ஒன்றிய அரசின் நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, கிராம ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியத்திற்காகவும், செயல்திறன் மானியத்திற்காகவும் ரூ. 1,140.31 கோடி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக 948.58 கோடி யும் கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவைப்பட் டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணத்திற்காக 546.83 கோடியும், கோவிட் பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப் படுத்தவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான உதவித் தொகை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காகவும் ரூ. 333.55 கோடியும் நகர்ப்புர உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு ரூ.212.92 கோடியும் ஒதுக்கீடு செய்யும் இறுதி துணை மதிப்பீடு களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் நிதியமைச்சர் கேட்டுக்கொண்டார்.