மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருண் ஆய்வு கூட்டம்
பெரம்பலூர், செப். 11- சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், சிறுபான்மையின மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், சிறுபான்மையின மக்களின் கருத்துருக்கள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் மிருணாளினி, ஆணைய துணை தலைவர் அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருண் தலைமை வகித்து சிறுபான்மையினருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள், பணிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கியது, செய்ய வேண்டிய பணிகள் குறித்து அரசு அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் மக்களிடம் கருத்துருக்கள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, ஒவ்வொரு கோரிக்கையின் மீதும் சம்மந்தப்பட்ட துறை அலுவர்களை உரிய பதில் அளிக்கச் சொல்லி, உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட்டார். பின்னர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், 141 பயனாளிகளுக்கு ரூ.20.54 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆணைய தலைவர் வழங்கினார். ஆய்வுக்கூட்டத்தில் எஸ்.பி ஆதர்ஷ்பசேரா, டிஆர்ஓ வடிவேல்பிரபு, மாவட்ட ஊரக வளரச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், ஆணையத்தின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
 
                                    