1 புற்று நோய்க்கு நார்ச்சத்து உணவு
‘சயின்ஸ்’ இதழில் வெளிவந்துள்ள ஒரு புதிய ஆய்வின்படி,அதிக நார் சத்து கொண்ட உணவை எடுத்துக் கொள்ளும் புற்று நோயாளிகள் குறைவாக எடுத்துக்கொள்பவர்களை விட சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் அடைகிறார்கள். இன்னொரு தகவல் நம் வயிற்றிலுள்ள நுண்ணுயிரிகள் நமது நோய் எதிர்ப்பு அமைப்பை தூண்டி புற்று நோய் சிகிச்சையில் நோயாளிகளின் முன்னேற்றத்திற்கு உதவுகின்றன.இது எவ்வாறு நடைபெறுகிறது என்பது தெளிவாகவில்லை.
2 கருப்பு மரபணுக்கள்
நமது ஜீன்களுக்கு வெளியே காணப்படும் டிஎன்ஏ கருப்பு மரபணு எனப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் அண்மையில் சிசோபெர்னியா மற்றும் பைபோலார் போன்ற மனச்சிதைவு நோய்களுக்கு காரணமான புரதங்களுக்கான பதிவுகள் கொண்ட வளர்ச்சியடைந்த பகுதிகளைக் கண்டறிந்துள்ளார்கள். இந்தப் புரதங்களை உயிரியல் குறியீடுகளாக பயன்படுத்தி இரண்டு நோய்களையும் வேறுபடுத்தவும் நோயாளிகளில் எவர் அதிக மனச்சிதைவுக்கு ஆளாவார்கள் என்பதையும் காணலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
3 கொசு அழிப்பில் மரபணு தொழில் நுணுக்கம்
டெங்கு, ஜிக்கா போன்ற நோய்களைப் பரப்பும் கொசுக்களை அழிப்பதற்கு அமெரிக்க நிறுவனம் ஆக்சிடெக் புதிய முறை ஒன்றைக் கண்டறிந்துள்ளது. இந்த முறையில் ஆண்கொசுக்கள் மரபணு மாற்றம் செய்யப்படுகின்றன. பின் அவைகள் பெண்கொசுக்களுடன் இனப் பெருக்கம் செய்யும்போது முட்டைக்குள் புகும் ஒரு மரபணு பெண்கொசுக்கள் வளர்ந்து மனிதர்களைக் கடிக்கு முன் அவற்றை அழித்துவிடுகின்றன. இனப்பெருக்கத்தில் பிறக்கும் ஆண் கொசுக்கள் அழியாமல் வளர்ந்து இன்னும் பல பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்கின்றன.இவ்வாறு இந்தக் கொசு இனம் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கிவிடுகிறது.
4 மீன் மழை
அமெரிக்க டெக்சாஸ் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 29ஆம் தேதி புதன்கிழமை அன்று பெய்த மழையின்போது வானிலிருந்து மீன்கள் விழுந்தன.’விலங்குகள் மழை’(animal rain) எனப்படும் அரிய நிகழ்வு இது.இது எவ்வாறு நிகழ்கிறது எனபதை அறிவியலாளர்கள் விளக்கியுள்ளார்கள்.தரையிலிருந்து கிளம்பி வானை நோக்கி சென்று மீண்டும் மழையாக பொழியும் நீர் சூறாவளி (waterspout) தரையிலிருந்து மீன்களை இழுத்து சென்று மழையாகப் பொழியும்போது வானிலிருந்து மீன்கள் விழுவதுபோல் தோன்றும்.
அழிந்த இனத்தை அரவணைத்த விஞ்ஞானிகள்
டெக்யிலா எனும் மீன் வகை 2003 ஆண்டு இயற்கையான வசிப்பிடங்களிலிருந்து மறைந்துவிட்டது.ஆனால் மெக்சிகோ நாட்டின் மிச்சகோனா பல்கலைக்கழகமும் செஸ்டர் உயிரியல் பூங்காவும் இணைந்து செய்த வளர்ப்பின் காரணமாக தற்போது மெக்சிகோ ஆற்றில் அவை மீண்டும் விடப்பட்டுள்ளது. 1998ஆம் ஆண்டு உயிரியல் பூங்கா ஐந்து ஜோடி மீன்களை மெக்சிகோ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியது.பல்கலைக்கழக ஆய்வுச்சாலையில் அவை புதிய காலனியாக வளர்ந்தது.அங்குள்ள விஞ்ஞானிகள் அவற்றை பராமரித்து விரிவாக்கியுள்ளனர்.
5 செல் இயக்கத்தின் ஒருங்கிணைந்த மாதிரி
இன்று செல் மாதிரிகளை உருவாக்கும் முறையில் ஒரு குறிப்பிட்ட உயிரியல் இயக்கம் மட்டுமே கவனப்படுத்தப்படுகிறது. எனவே ஒவ்வொரு முன்மாதிரியும் செல் உள்ளே நடக்கும் பல்வேறு சிக்கலான இயக்கங்களில் ஒரு பகுதியை மட்டுமே படம் பிடிக்க இயலும். பல்வேறுவகைப்பட்ட உயிரியல் முன்மாதிரிகளை இணைத்து ஒற்றை கணிதச் சட்டகமாக மாற்றினால் செல் கட்டமைப்பையும் இயக்கத்தையும் மேலும் துல்லியமாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்ள முடியும். இப்போது ஷாங்காய் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்களும் மற்றும் வேறு சில ஆய்வாளர்களும் இணைந்து வெவ்வேறு முன்மாதிரிகளை ஒருங்கிணைக்கும் வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத முன்மாதிரிகளை ஒன்றுகூட்டி சுமுகமான முறையில் இணைத்து துல்லியமானதும் விரிவானதுமான ‘மெட்டா மாடல்’ எனும் செல் வரைபடத்தை உருவக்கியுள்ளார்கள்.
6 மருத்துவர்களுக்கு மரியாதை
இங்கிலாந்தில் புத்தாண்டு கவுரவப் பட்டியலில் முன்னணி அறிவியலாளர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர்.இங்கிலாந்தின் முதன்மை மருத்துவ அதிகாரி கிரிஸ் விட்டிக்கு இரண்டாண்டு கோவிட் பெரும்தொற்றுப் பணி களுக்காக நைட்ஹூட் என்கிற பட்டம் கொடுக்கப்பட்டது. அதே போல் சுகாதாரப் பாதுகாப்பு முகமை அதிகாரி ஜென்னி ஹாரிசுக்கு டேம்ஹூட் பட்ட மும் வழங்கப்பட்டது.வெல்ஷ் மற்றும் ஸ்காட்லாந்து மருத்துவ அதிகாரிகளும் கவுரவிக்கப் பட்டனர்.
7 வழக்காட செயற்கை நுண்ணறிவு
வழக்காட செயற்கை நுண்ணறிவு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி 97சதவிகிதம் துல்லியமாக குற்றப் பத்திரிகை தயாரிக்கும் இயந்திரத்தை சீன ஷாங்காய் மாநில புடோங் மக்கள் மையம் வடிவமைத்து சோதனைகளும் செய்துள்ளது. முடிவுகள் எடுப்பதில் வழக்குரைஞர்களுக்கு பதிலாக இந்த இயந்திரங்கள் ஓரளவுக்கு பயன்படும் என்கிறார் இந்த ஆய்வின் முன்னணி அறிவியலாளர் சி யாங். 2015-2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 17000 பொதுவான குற்றங்கள் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.