கும்பகோணம் அருகே சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவர் பலி
கும்பகோணம், ஆக. 29- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கன்னிதோப்பு பகுதியைச் சேர்ந்த தம்பதி கணேசன்-வள்ளி. இவர்களுடைய மகன் மணி அட்சயன்(11) திருபுவனம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்ததால் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பழைய கீற்றுக்கொட்டகை எதிர்பாராதவிதமாக இடிந்து, அங்கு விளையாடி கொண்டிருந்த மணி அட்சயன் மீது விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த மாணவர் மணி அட்சயனை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவர், மணி அட்சயன் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று மாணவர் மணி அட்சயன் உடலை திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.