tamilnadu

நீர்நிலைகளை தூர்வாரி தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

நீர்நிலைகளை தூர்வாரி தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

தஞ்சாவூர், ஜூலை 3-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி கிழக்கு கடற்கரை தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில், அதன் தலைவர் இ.வீ. காந்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜத்துக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.  அந்த மனுவில், “தற்போது, 83 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்திலேயே மேட்டூர் அணையும், மைசூரில் உள்ள கே.ஆர்.எஸ் அணையும் நிரம்பி வழியும் நிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் நீர்மேலாண்மையை திறம்படக் கையாள்வது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே, தற்போதைய சூழ் நிலையைப் பயன்படுத்தி, மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் ஆகியவற்றில், நீர் நிரப்ப உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில், அபரிமிதமான நீர் கடலுக்கே செல்லும் சூழ்நிலை உள்ளது. மேலும், காவிரி ஆற்றின் பிரதான வாய்க்கால்கள் மற்றும் துணை வாய்க்கால்களில், தூர்வாரும் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை என்றாலும், தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி நீர் மேலாண்மையை சிறப்பாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், பொதுப்பணித்துறையும், வேளாண் துறையும் ஒருங்கிணைத்து இதற்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை முடுக்கி விட வேண்டும். இல்லையெனில், வருடா வருடம் ஒரு பக்கம் வெள்ள அபாயமும், மறுபக்கம் தண்ணீர் பஞ்சமும் தவிர்க்க முடியாத நிலையாகவே மாறிவிடும். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக விரைந்து செயல்பட்டு, நீர் ஆதாரத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஆனந்தவல்லி வாய்க்கால்  பேராவூரணி நகரில் உள்ள ஆனந்தவல்லி வாய்க்காலின் நிலை மிக மோசமாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சையிலிருந்து கல்லணையை அடைந்து பேராவூரணிக்கு வரும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். ஆவணம் பகுதி மெயின் வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால் மூலம் ஆனந்தவல்லி வாய்க்காலுக்கு தண்ணீர் வரும். இந்த ஆனந்தவல்லி வாய்க்கால் ஆவணம், பழையநகரம், மாவடுகுறிச்சி, பொன்காடு, கொரட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. பாசனத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆனந்த வல்லி வாய்க்காலில் மாவடுகுறிச்சி முதல், கழனிவாசல் வரை முழுமையாக தூர்வாரப்படவில்லை. இதனால் வாய்க்காலில் முட்புதர் செடிகள், ஆகாயத்தாமரை மற்றும் தென்னைமரக் கழிவுகள் அதிகமாகக் காணப்படுகிறது. அதேபோல பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் தேங்கி உள்ளதாலும், இது பேராவூரணி நகருக்குள் செல்வதாலும் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஆனந்தவல்லி வாய்க்காலை முழுமையாக தூர்வாரி முட்புதர்கள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, தண்ணீர் முழுமையாக செல்ல மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.