tamilnadu

img

சிறு குறு நடுத்தர தொழில் கண்காட்சி நடத்த கோரிக்கை

சிறு குறு நடுத்தர தொழில் கண்காட்சி நடத்த கோரிக்கை 


சிறு குறு நடுத்தர தொழில் கண்காட்சி நடத்த கோரிக்கை  ராணிப்பேட்டை, ஜூலை 12 –  ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் இயங்கி வரும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான குறைதீர்வு நாள் கூட்டம் வியாழனன்று (ஜூலை 10) மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மின்வெட்டு பராமரிப்பு பணிகளை மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளருக்கு இது குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.  குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் உற்பத்தி கண்காட்சியை மாவட்ட அளவில் ஆண்டுதோறும் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களுக்கு தனியாக ஒரு கட்டிடம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.   சிப்காட் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை மாற்று இடங்களில் மாற்றியமைக்க வேண்டும். பேருந்து வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். அரக்கோணம் சிட்கோ தொழிற்பேட்டையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை, பெல் நிறுவனம் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் மாவட்டத்தில் சிஎம்சி மருத்துவமனை, டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் போன்ற பெரிய நிறுவனங்கள் உள்ளது. முகுந்தராயபுரம் அல்லது வாலாஜா ரயில் நிலையங்களில் கூடுதல் ரயில் நிற்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.  இப்பிரச்சனைகள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டுள்ளார். அருந்ததியர் குடும்பத்தினர் மீது  ஆதிக்க சாதியினர் தாக்குதல் செங்கம் காவல் நிலையத்தில் சிபிஎம் புகார் திருவண்ணாமலை, ஜூலை 12- செங்கம் அருகே, ஆதிக்க சாதியினர் நிலத்தில் குத்தகை விவசாயம் செய்த அருந்ததியர் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செங்கம் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா அரட்டவாடி பகுதியில் ஆதிக்க சமூகத்தின் நிலத்தை, அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த அசோக் குமார் குடும்பத்தினர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலத்தில் அருந்ததியர் சமூகத்தினர் விவசாயம் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அருந்ததியர் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அருந்ததியர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை ஆபாசமாகப் பேசி தாக்கியதுடன், அசோக்குமாரின் தம்பி அரவிந்தை கம்பத்தில் கட்டி தாக்கி கொடுமைபடுத்தினர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரவிந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எ.இலட்சுமணன், எஸ்.ராமதாஸ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சி.எம்.பிரகாஷ், சிபிஎம் தாலுகா செயலாளர் பி.கணபதி மற்றும் நிர்வாகிகள் சரவணன், கண்ணன், சுந்தரேசன், கவுண்டமணி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செங்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். சிபிஎம் தொடர் முயற்சிக்கு வெற்றி பழங்குடியினர் குடியிருப்பில் குடிநீர் வசதி திருவண்ணாமலை, ஜூலை 12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் முயற்சியால் கோட்டுப்பாக்கம் ஊராட்சியில் பழங்குடியினர் குடியிருப்பில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம், கோட்டுப்பாக்கம் ஊராட்சியில் பழங்குடியினர் குடியிருப்பில் குடிநீர் இல்லாமல் மக்கள் தவித்து வந்தனர். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கட்சியின் திருவண்ணாமலை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பெரணமல்லூர் சேகரன், ஒன்றியச் செயலாளர் பிரபாகரன் எடுத்த நடவடிக்கைக் காரணமாக, வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி கோரிக்கையை நிறைவேற்றினார். அதன் பலனாக அந்த பகுதியில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, சிறு மின்விசைப்பம்பு மூலம் தற்போது குடிநீர் வழங்கப்படுகிறது. விரைந்து குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.