tamilnadu

ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்களில் மக்கள் நலப் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை

ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்களில் மக்கள் நலப் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை

தென்காசி, செப். 7- தமிழகத்தில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களில் மக்கள் நலப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று  ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.  சங்கத்தின் மாநிலத்தலைவர் எஸ்.ரமேஷ் ,மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜசேகரன் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் மக்கள் நலப்பணியாளர்கள் பணியிடங்களை 1989-ஆம் ஆண்டு ஏற்படுத்தி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் படித்த, வறிய நிலையில் இருந்த இளைஞர்களை நியமித்தார். பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அஇஅதிமுக அரசால் இவர்கள் மூன்று முறை பணி நீக்கம் செய்யப்பட்டார்கள்.  திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இவர்கள் மீள பணியமர்த்தப் பட்டார்கள். 2011-ஆம் ஆண்டு இவர்கள்  திமுக அரசால் மீண்டும் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். அதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் தங்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு வழங்கிய உறுதிமொழியினை ஏற்று 2022-ஆம் ஆண்டு மீண்டும் பணி நியமனம் செய்யப்பட்டார்கள். கடந்த 36 ஆண்டுகளில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் ஊரக வளர்ச்சித் துறையில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி வருகின்றனர். தற்பொழுது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக திறம்பட செயலாற்றி வருகின்றனர். இவர்களது அரசுப்பணி நிரந்தரமாக்கப்படும் என்று எண்ணி தம் வாழ்நாளில் பெரும் பகுதியினை கடந்து விரைவில் பணி ஓய்வு பெறும் நிலையில் பணியாற்றி வருகின்றனர்.  இவர்கள் ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த பணிகளில் முன் அனுபவம் கொண்டுள்ளதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் காலியாகவுள்ள கிராம ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களில் தற்பொழுது பணியாற்றி வரும் மக்கள் நலப்பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.