வீட்டு மனைப் பட்டா வழங்க கோரிக்கை
பெரம்பலூர், ஆக. 12- பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், பெருமத்தூர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னுசாமி, கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். குன்னம் வட்டச் செயலாளர் செல்லமுத்து முன்னிலை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் குன்னம் வட்டாட்சியர், மார்க்சிஸ்ட் கட்சியிடம் அமைதி பேச்சுவார்த்தையில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். பெருமத்தூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். பஞ்சாயத்து நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழலை தடுத்து நிறுத்த வேண்டும், ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.கே. ராஜேந்திரன், மாற்றுத் திறனாளிகள் மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.