மரவள்ளிக் கிழங்கு பயிர்ச்சேதம் நஷ்டஈடு வழங்க கோரிக்கை
சின்னாளப்பட்டி, அக்.18– தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிலக்கோட்டை ஒன்றி யச் செயலாளர் எம். காசிமாயன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: “நிலக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சிலுக்குவார்பட்டி ஊராட்சியில் உள்ள கிராமத்தில், 25 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிரி டப்பட்டது. விவசாயிகள் முள் வேலி அமைத்து பாது காத்து வந்தனர். கடந்த மூன்று மாதங்களாக களை வெட்டி, ஏக்கருக்கு சுமார் ரூ.25,000 செலவில் பயிரை வளர்த்தனர். ஆனால், சில நாட்களுக்கு முன்பு காட்டுப் பன்றி கள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் வழங்கினர். வனத்துறையினர் வந்து நிலைமை யைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும், காட்டுப் பன்றிகள் போன்ற காட்டு விலங்குகள் மீண்டும் வராமல் தடுக்கும் வகையில் வனத்துறை உரிய பாதுகாப்பு நடவடிக்கை களை எடுக்க வேண்டும்,” என்று எம். காசிமாயன் தெரி வித்துள்ளார்.
நிலக்கோட்டையில் வெளுத்து வாங்கிய கனமழை தீபாவளி பண்டிகை கொள்முதல் பாதிப்பு, வியாபாரிகள் ஏமாற்றம்
சின்னாளப்பட்டி, அக்.19- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இடைவிடாத மழை பெய்து வருகிறது. சனியன்று காலை தொடங்கிய சாரல் மழை, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை இடிமின்னலுடன் கூடிய கனமழை யாக பெய்தது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கனமழை யால், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன. பல இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதியுற்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிலக்கோட்டை நகரில் சாலையோரம் மற்றும் சந்தை பகுதிகளில் பல தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், கனமழை காரணமாக பொதுமக்கள் கடைகளுக்கு வர முடியாமல் போனதால், கடைவீதிகள், நான்கு ரோடு சந்திப்பு உள்ளிட்ட வணிகப் பகுதிகள் வெறிச்சோடின. இதனால், பண்டிகை நாட்களில் நல்ல வர்த்தகம் கிடைக்கும் என எதிர்பார்த்த வியாபாரிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். “மழையால் மக்கள் வர வில்லை; கடைகள் வெறிச்சோடியுள்ளன” என்று வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
இராமநாதபுரம், அக்.18- இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நயி னார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சனியன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முரு கேசன் துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் பரமக்குடி சுகாதார மருத்துவ அலுவலர் மரு.பொற்செல்வன் உள்ளார்.