சென்னை,டிச.5- குடிசை மாற்று வாரிய வீடுகளில் குடியிருக்கும் மக்களின் வாழ்விட உரி மையை வலியுறுத்தி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக் குழு சார்பாக 6 மையங்க ளில் 26 குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் ஞாயிறன்று ( டிச.5) பிரச்சார இயக்கம் நடைபெற்றது. எழும்பூர், கேசவப் பிள்ளை பூங்கா குடிசை மாற்று வாரியத்தில் பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்து கட்சி யின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசிய தாவது: “1972இல் அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் மேயர் கிருஷ்ணமூர்த்தியின் ஆலோசனையின் அடிப்ப டையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு திட்டத்தை நாட்டிலேயே முன்னோடி திட்டமாக உருவாக்கினார். ஆனால் இன்று குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் இருக்கும் மக்களின் வாழ்விட உரிமையை பறிக்கக்கூடிய வகையில் ஒன்றிய பாஜக அரசோடு இணைந்து கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணை பெரும் பாதிப்பை உருவாக்கி யுள்ளது.
தொடர்ந்து போராடுவோம்
பழுதடைந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பை இடித்துக் கட்டும்போது அதில் குடியிருக்கும் மக்களிடமிருந்து ரூ.1.5 லட்சம் பங்களிப்பு தொகை கேட்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ஏழை எளிய மக்களின் மேல் அக்கறை கொண்டு, விவசாயிகள் கடன், சுயஉதவிக் குழு கடன், நகைக்கடன், ஆகியவற்றை தள்ளுபடி செய்வதுபோல சென்னை நகரின் வளர்ச்சிக்கு பெரும்பாடுபட்ட குடிசை பகுதி மக்களிடம் ரூ. 1.5 லட்சம் கேட்டு கடந்த அதிமுக ஆட்சியில் போட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். சென்னை மாநகரத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்க ளின் வாழ்விட உரிமைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும்” என கூறினார். இதில் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.கே.முருகேஷ், எஸ்.சிவசுப்பிரமணியம், எழும்பூர் பகுதி செய லாளர் கே.முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
நிபந்தனைகளை வெளியிடுக
ஆயிரம் விளக்கு தேனாம்பேட்டை திரு.வி.க குடியிருப்பில் பிரச்சார இயக்கத்தை மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி துவக்கி வைத்து பேசி னார். “தமிழ்நாடு அர சாங்கம் இனி புதியதாக கட்டக்கூடிய குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மக்களின் பாதுகாப்பையும், கட்டுமான தரத்தையும் உறுதி செய்யக்கூடிய வகையில் அரசாங்கத்தின் பொதுப்பணித் துறை மூலமே குடியிருப்புகளை கட்ட வேண்டும். அதே போன்று தமிழக அரசின் முற்போக்கு திட்டமான குடிசை மாற்று வாரிய குடி யிருப்பு திட்டத்தை உலக வங்கியின் நிபந்த னையின்பேரில் நீர்த்துப் போவதற்கு வழிவகை செய்யக் கூடாது. மாறாக தமிழக மக்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் ஒப்புக் கொள்ளப்பட்ட நிபந்தனை களை வெளியிட வேண்டும்
வாழ்விட உரிமையை பாதுகாப்பீர்
வில்லிவாக்கம் பகுதியில் அயனாவரம், பச்சைக்கல்லு வீராசாமி தெரு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்தார். “சென்னையில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு வாழ்விட உரிமையை உத்தரவாதம் செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. நீர்நிலைகளிலும், சாக்கடை ஓரங்களிலும் கொசுக்கடியில் கழிவுகளின் மத்தியில் மக்கள் விருப்பப்பட்டு வாழவில்லை. அவர்கள் வசிப்பதற்கு பொருளாதார வசதி இல்லாத காரணத்தினால் இப்படிப்பட்ட இடங்களில் வசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மக்கள் தான் இந்த நகரத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கின்றனர். வாழ்விட உரிமைக்காக சென்னை மாநகர மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து போராட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என கூறினார். இவ்வியக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.தனலட்சுமி, பகுதி செயலாளர் ஜி.அன்பழகன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ப.சுந்தரம், எம்.ஆர்.மதியழகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
அண்ணாநகர்
அண்ணா நகர் பகுதி த.பி.சத்திரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்தார். “குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் பழுதடைந்துள்ள கழிவுநீர் கால்வாய்களை மாற்றிக் கொடுப்பது, குப்பைகளை உடனுக்குடன் அள்ளுவது ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். சமூகத்தில் நலிவடைந்த மக்களுக்கான வாழ்விட உரிமையை உத்தரவாதம் செய்யக்கூடிய வகையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை வணிக நோக்கத்தோடு மாற்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என்றார். இந்த இயக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.திருவேட்டை, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மனோண்மணி, பகுதி செயலாளர் கே.மகேந்திரவர்மன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
சேப்பாக்கம்
சேப்பாக்கம் பகுதியில் நெடுஞ்செழியன் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மாநிலக்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்தார். அப்போது “சென்னை மாநகரத்தில் மக்கள் வசிக்கக்கூடிய ஒவ்வொரு குடியிருப்பும் அரசு இயந்திரத்தால் இடிக்கப்பட்டு கொண்டே வருகின்றன. நகரத்தின் மையப்பகுதியில் வாழ்ந்த மக்களை 40 கி.மீட்டருக்கு அப்பால் பெரும்பாக்கம், செம்மஞ்சேரி பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் அற்ற இடத்தில் குடியமர்த்துகின்றனர். உல்லாச விடுதிகளும், கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்காக குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் அடிப்படை அம்சத்தை சிதைக்கக்கூடிய நட வடிக்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து மக்களுடன் இணைந்து போராடும். மழை வெள்ளத்திலிருந்து மக்களை பாதுகாப்பதாக சொல்லி சென்னையிலிருந்து பெரும்பாக்கத்தில் குடிய மர்த்தினார்கள். ஆனால் இந்த மழையில் பெரும்பா க்கத்தில் படகுகளில் மக்கள் பயணிக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது. இப்படிப்பட்ட மோசமான திட்டத்தை உருவாக்கும் கொள்கைக்கு எதிராக மக்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கட்சி போராடும்” என்றார். இந்த இயக்கத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வே.ஆறுமுகம், பகுதி செயலாளர் கவிதா கஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் தி. ஜெய்சங்கர், எம்.தயாளன், மு.பழனி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
துறைமுகம்
துறைமுகம் பகுதி பி.ஆர்.என். கார்டன் பகுதி யில் பிரச்சார இயக்கத்தை மாநிலக் குழு உறுப்பினர் தீபா துவங்கி வைத்தார். “குடிசையில் வசித்த மக்களை அடுக்கு மாடி குடியிருப்பில் குடி யிருக்க வைப்பதற்கு உருவாக்கப்பட்ட திட்டத்தை சீரழிக்க கூடிய வகையில் உலக வங்கி கொடுத்த நிர்ப்பந்தத்தை அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டன. கார்ப்பரேட்டுகளின் சுயலாபத்திற்காக அரசாங்கக் கொள்கைகள் மாறுவதன் காரணமாக உழைக்கும் மக்களின் வாழ்விட உரிமை பறி போகிறது. உழைக்கும் மக்க ளால் உருவாக்கப்பட்ட நகரின் வளர்ச்சியில் அவர்களுக்குரிய பங்காக வாழ்விட உரிமையை உத்தர வாதப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை” என தெரிவித்தார். இப்பிரச்சார இயக்கத்தில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் இரா.அருள்குமார், எஸ்.மஞ்சுளா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.