tamilnadu

img

காவிச் சுரும்புகள் -

மதபோதையில்
சுயநிறங்களைக்
கழற்றி எறிந்துவிட்டு
காவி நிறம் பூண்டு
வானவில் காட்சிதரும் தேசத்தில்
காவிச் சிறகுகள் முளைக்கின்றன
வண்ணத்துப் பூச்சிகளுக்கு

இனிமேல் காவிப் புற்கள்தான்
போடவேண்டும்
பசித்திருக்கும் பசுக்களுக்கு என
ஆணை பிறப்பித்தான் 
அத்தேசத்து அரசன்

நரை விழுந்த தலைக்கு
காவி ‘டை’ அடித்துக்கொண்டால்
ஆயுள் கூடுமென ‘வாட்ஸ் ஆப்’பில்
செய்திகள் பரப்பப் படுகின்றன

இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள்
கடலையும் வானத்தையும்
காவி நிறமாக்குவதற்கான
சாத்தியங்களை ஆய்வுசெய்ய
நிபுணர்கள் குழுவொன்று
நியமிக்கப் பட்டுள்ளது

கருப்பு இறகுகளை உதிர்த்துவிட்டு
காவி இறகுகளை வளர்த்துக்கொள்ளாத
காக்கைககள்
பாகிஸ்தானுக்கு விரட்டப்படும் என
அறிவிப்பு வந்துவிட்டது

அன்னமும் இனிக்
காவிநிறத்தைக் கொண்டிருக்கும்
அன்னமும் குஞ்சைக்
காவிநிறத்தில்தான் பொரிக்கும்

பசுக்களும் இனிக்
காவிநிறத்தில் பால் கறக்கும்
குசுக்களும் இனித்
தேவ பாஷையில் வெடிக்கும்

சோலையில் பூத்திருக்கும்
வண்ணவண்ணப் பூக்களே!
உங்களை நாடிவரும் சுரும்புகளிடம்
கவனமாய் இருங்கள்!

எந்தச் சுரும்பு உங்களின்
நிஜ நிறத்தை உறிஞ்சிவிட்டு
உங்கள் மேல்
காவிநிறம் பூசிவிட்டுச்
செல்லுமென்று தெரியாது
மனோந்திரா