சீனாவுடனான உறவு மேம்பட்டு வருகிறது!
பெய்ஜிங்கில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேச்சு
பெய்ஜிங், ஜூலை 14 - சீனாவுடனான உறவு மேம்பட்டு வருகிறது எனவும் இந்தியா - சீனா உறவை தொடர்ந்து இயல்பு நிலையில் வைத்திருக்க வேண்டும்; இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றம் மிகவும் முக்கியம் என்று சீனா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஷாங்காய் கூட்டமைப்பின் அமைச்சர்கள் மாநாடு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation - SCO) இந்த ஆண்டுக்கான தலைவராக சீனா உள்ளது. இதையொட்டி, கூட்டமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் செவ்வாய் (ஜூலை 15) அன்று நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சீனா சென்றுள்ளார். 2019-க்குப் பிறகு முதல் முறையாக ஜெய்சங்கர் சீனா சென்றுள்ளார். சீனத் துணை ஜனாதிபதியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு தலைநகர் பெய்ஜிங்கில், சீனத் துணை ஜனாதிபதி ஹான் ஜெங்கை சந்தித்த ஜெய்சங்கர், இருதரப்பு உறவை வலுப் படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்தியா - சீனா இடையேயான உறவு தொடர்ந்து இயல்பு நிலையில் இருக்க அவர் அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி யும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் சந்தித்துக் கொண்ட பிறகு இருதரப்பிலும் உறவு சீராக மேம்பட்டு வருகிறது என தெரிவித்துள்ள துடன் தனது இந்த பயணம் அதை மேலும் மேம்படுத்தும் என நம்புவதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார். இருபெரும் பொருளாதார நாடுகள் மேலும் சர்வதேச நிலைமை மிகவும் சிக்கலானதாக உள்ள நிலையில், அண்டை நாடுகளாகவும் பெரிய பொருளாதார நாடு களாகவும் உள்ள இந்தியாவும் சீனாவும் வெளிப்படைத் தன்மையுடன் கருத்துக் களைப் பரிமாறிக்கொள்வது மிகவும் அவ சியம் எனவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.