tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் தொடரும் மழை

திருநெல்வேலி, ஆக.31- நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாஞ்சோலை பகுதியில் உள்ள எஸ்டேட்டுகளில் மழை நீடிக்கிறது. அப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி நாலுமுக்கு எல்டேட்டில் அதிகபட்சமாக 27 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 24 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 19 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் நாங்குநேரி சுற்றுவட்டாரத்தில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 110 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 974 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து பாசனத்திற்காக 1,750 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. சேர்வலாறு அணையில் 104 அடியும், மணிமுத்தாறில் 93.52 அடியும் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அணைகள் நீர் இருப்பு சற்று அதிகமாவே இருக்கிறது. பாபநாசம் அணையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1 அடி நீர் இருப்பு அதிகமாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 9 அடி நீர்  இருப்பு குறைவாக உள்ளது.

நெல்லை, தென்காசியில்  மின் நுகர்வோர்   குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி, ஆக. 31- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்ட தேதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி செப். 2ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்தில் மின் நுகர் வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்,  செப். 9 தென்காசி கோட்ட அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்படும். செப். 12இல் வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், 16ஆம் தேதி நெல்லை நகர்ப்புற கோட்ட அலுவலகத்திலும், செப்.19ஆம் தேதி கடையநல்லூர் கோட்ட அலுவலகத்திலும் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.  இத்தகவலை மின் பகிர் மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண் டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில்  வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயர்வு:  மீனவர்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி, ஆக. 31 தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள்  கரை திரும்பின. மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.  ஆனால், கடல் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக, மீன்கள் சரிவர கிடைக்காததால் வரத்து குறைந்திருந்தது. இதனால், வழக்கத்தைவிட விலை உயர்ந்து காணப்பட்டது. விளைமீன், ஊழி, பாறை ஆகியவை கிலோ ரூ. 300 -ரூ. 600 வரை, சாளை மீன் ஒரு கூடை ரூ. 800 முதல் ரூ. 1000 வரை, நண்டு கிலோ ரூ. 550 வரை, தோல்பாறை ரூ. 200 வரை என விற்பனையாகின.  ஏற்றுமதி ரக மீன்களான கலவா கிலோ ரூ. 450, பண்டாரி ரூ. 500 - ரூ. 600 வரை, கிளி மீன் ரூ. 900 வரை, தம்பா ரூ. 250 வரை என விற்பனையாகின. வரத்து குறைந்திருந்தாலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வீடு புகுந்து பெண்ணிடம்  7 பவுன் நகை பறிப்பு:  மர்ம நபர் கைவரிசை

தூத்துக்குடி, ஆக. 31 சாத்தான்குளம் அருகே காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம்,சாத்தான்குளம் அருகே பனைவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி மனைவி ஜெபக்கனி (55). இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவுக்காக குடும்பத்துடன் வந்திருந்தார்.  சம்பவத்தன்று இரவில் ஜெபக்கனி காற்றோட்டத்துக்காக வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கியதாக கூறப்படுகிறது. இதனை நோட்டமிட்ட மர்மநபர் வீட்டுக்குள் புகுந்து, ஜெபக்கனி கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார்.  உடனே கண்விழித்த ஜெபக்கனி நகையை இறுக பிடித்துக் கொண்டு கூச்சலிட்டு போராடினார். இதில் தங்க சங்கிலி இரண்டு துண்டாக அறுந்தது. மர்மநபரின் கையில் கிடைத்த 7 பவுன் தங்க சங்கிலியுடன் இருளில் தப்பி ஓடினார். அவரை குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் விரட்டி பிடிக்க முயன்றும் முடியவில்லை.  இதுகுறித்த புகாரின்பேரில் தட்டார்மடம் காவல்  ஆய்வாளர்ஸ்டெல்லாபாய் வழக்குப்பதிந்து நகை திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்.