அக்.3 முதல் 12 வரை புதுக்கோட்டை புத்தகத் திருவிழா
புதுக்கோட்டை, ஆக. 12- புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 8 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா, அக்டோபர் 3 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரும், புத்தகத் திருவிழா தலைவருமான மு.அருணா தெரிவிக்கையில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 8 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல், 12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 10 நாள்கள் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடத்தப்படும். புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், அறிவியல், கணித, தொல்லியல், கண்காட்சிக் கூடங்கள், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் மூலமாக வான்நோக்கு நிகழ்வு கோளரங்கம், வானவில் மன்றத்தின் மூலமாக எளிய அறிவியல் பரிசோதனைகள், ஏன்? எதற்கு? எப்படி? போன்ற மாணவர்கள் சிந்திக்க கூடிய வகையில் அறிவியல் அமர்வுகள் போன்றவை நடைபெறும். இந்நிகழ்வில், பள்ளி, கல்லூரி மாணவர்களின் மாலை நேர கலை நிகழ்ச்சிகள், அறிவியல் அறிஞர்களின் சொற்பொழிவுகள், சிறப்பு பேச்சாளர்களின் கலை இலக்கிய உரைகள் ஆகியவை நிகழ்த்தப்படும். முன்னணி புத்தக பதிப்பகங்கள் புத்தக அரங்கில் பங்கேற்கின்றனர் என்றார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.முருகேசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) எஸ்.ஞானம், மாவட்ட நூலக அலுவலர் மு.ப.கார்ல்மார்க்ஸ், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.