சிதம்பரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சிதம்பரம், அக் 14- சிதம்பரம் அருகே கனகரப்பட்டு கிராமத்தில் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மாலை நேரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது சிதம்பரம் அருகே உத்தமசோழமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வந்த குடிநீர் கடந்த 6 மாதங்களாக வழங்கவில்லை. இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள பொது மக்கள் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உத்தமசோழமங்கலம், கனகரப்பட்டு, நடராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு இரு சக்கர வாகனங்கள் மூலம் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தினர். இந்த நிலையில் செவ்வாய் கிழமை மாலை சிதம்பரம் - தெற்குபிச்சாவரம் சாலையில் கனகரப்பட்டு என்ற இடத்தில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை அமர்ந்து குடிநீர் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி வேன்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
