tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

வீட்டுமனைப்பட்டா, நில உரிமை கேட்டு  செப்.30 இல் மனு கொடுக்கும் போராட்டம் 

அரியலூர், செப். 8- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில், அரியலூர் மாவட்டக் குழு கூட்டம் ஜெயங்கொண்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி டி.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.  இதில் விதொச மாநிலச் செயலாளர் வி. மாரியப்பன் மற்றும் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் இரா. மணிவேல், விதொச மாவட்டச் செயலாளர் எ.கந்தசாமி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் 9 பேர், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம். வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் பேசினர். வீட்டுமனைப்பட்டா, நில உரிமை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வரும் செப்டம்பர் 30 இல் மாநிலம் தழுவிய மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது. போராட்டத்தை விளக்கி மாநிலக்குழு வெளியிடும் துண்டுபிரசுரம் ரூ10 என மாவட்டம் முழுவதும் 3000 பிரசுரம் மக்களிடம் விற்பனை செய்வது.  மொத்தம் உள்ள 6 இடைக்கமிட்டிகளில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் இர.மணிவேல் தலைமையில் செப்.13 இல் திருமானூர், செப். 11 இல் ஆண்டிமடம், செப். 12 இல் அரியலூர் வி.ச. விதொச இடை கமிட்டி கூட்டங்கள் நடத்துவதெனவும், அதேபோல் விதொச மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமையில் செப்டம்பர் 12 ஜெயங்கொண்டம், செப். 13 இல் தா.பழூர், செப். 14 இல் செந்துறையில் விச, விதொச சேர்ந்து இடைக் கமிட்டி கூட்டங்கள் நடத்துவது. போராட்டத்தை ஆட்டோ பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.  இதில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் தனவேல், பெரியசாமி, மீனா, சொக்கலிங்கம், மணியம்மை, ராமமூர்த்தி, வேம்பு, பல்கீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பூதலூரில் முழு சந்திர கிரகணம் காணும் நிகழ்வு!

தஞ்சாவூர், செப். 8-  தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் செப். 7 அன்று இரவு கிரகங்களின் நிழல் விளையாட்டு நிகழ்வான சந்திர கிரகணத்தைக் காண, வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொலை நோக்கிகளுடன் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பெரியார் புரா திட்டம், தமிழ்நாடு ஆஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டி, வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தஞ்சாவூர் ஆஸ்ட்ரொ கிளப் இணைந்து, அரிய நிலவு மறைப்பு நிகழ்வான சந்திர கிரகண காணல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியிலிருந்து பெற்றோரும், மாணவர்களும் பள்ளி வளாகத்தில் குவிந்தனர். இரவு 8 மணிக்கு வீசிய பெரும் காற்றும், அடர் மேகமும், தொடர் மழையும் இந்த அரிய நிகழ்வை மாணவர்களும், பொதுமக்களும் நேரடியாக காண இயலாத நிலையை ஏற்படுத்தியது. உடனடியாக ஆர்வலர்களின் வேட்கையை நிவர்த்தி செய்ய இணையவழியாக சந்திர கிரகண நிகழ்வு விளக்கிக் காட்டப்பட்டது.  மேலும், தொலை நோக்கியைக் கொண்டு தொலைவில் உள்ள ஒளிகளைக் காணச் செய்து, அதன் தொழில்நுட்பமும் விளக்கப்பட்டது. பள்ளி முதல்வர் ஏ.தேவஅன்பு தலைமையில் நடைபெற்ற நிகழ்வை, பள்ளியின் தாளாளர் ஏ.செல்வகுமாரி தொடங்கி வைத்தார். பெரியார் புரா திட்டத்தின் நிர்வாகி பேராசிரியர் வெ.சுகுமாரன், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர் க. கேசவன் ஆகியோர் விளக்க உரை நிகழ்த்தினர்.  இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழக உயிரி தொழில்நுட்ப ஆய்வாளர்  ர.வைஷ்ணவி ஒருங்கிணைத்தார். நள்ளிரவுக்கு மேல் கிரகண விடுவிப்பு நிகழ்வை அனைவரும் கண்டு ரசித்தனர்.

இலவச வீட்டு மனை பட்டா  கேட்டு மனு 

கரூர், செப். 8-  கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில், க.பரமத்தி ஒன்றியம், கோடந்தூர் கிராமம், கரியமாபுதூரில் அருந்ததியர் மக்கள் நான்கு தலைமுறையாக வசித்து வருகின்றனர்.  தற்போது, அந்த நிலத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் மாவட்டச் செயலாளர் பெரு.பாரதி தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நில உரிமை-குடிமனை உரிமையை வலியுறுத்தி செப்.30 இல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

கரூர், செப். 8-  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கரூர் மாவட்ட குழுக்கள் சார்பில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே. கந்தசாமி தலைமையில் மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர்  பழனிசாமி, செப். 30 இல் நடைபெறும் போராட்டத்திற்கான முன்னெடுப்பு பணிகள் விளக்கி பேசினார்.   வி.ச மாவட்டச் செயலாளர் கே. சக்திவேல், விதொச மாவட்டச் செயலாளர் பி.ராஜு, தவிச மாவட்டப் பொருளாளர் கே. சுப்பிரமணியன், விதொச மாவட்ட தலைவர் கண்ணதாசன், மாவட்டப் பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் கூட்டத்தில் பேசினர். சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல்லில் நடைபெற்ற நில உரிமை - குடிமனை உரிமைக்கான சிறப்பு மாநில மாநாட்டின் முடிவின் படி, செப்டம்பர் 30 ஆம் தேதி பி.சீனிவாசராவ் நினைவு தினத்தன்று, நில உரிமை - குடிமனை உரிமைக்காக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது, கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டு அமைப்புகளின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை திரட்டி  பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.