ராவத்த நல்லூரில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த கோரி தர்ணா
கள்ளக்குறிச்சி, செப். 24- கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள ராவத்தநல்லூர் பள்ளி வாசல் தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்தக் கோரி புதனன்று (செப்.24) பொதுமக்கள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ராவத்தநல்லூர் பள்ளிவாசல் எதிரே உள்ள தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் உடல்நலக்குறைவு ஏற்படுவதால் கழிவு நீரை வெளியேற்ற வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பொதுமக்கள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். அதிகாரிகள் வரும் வரை அதே இடத்தில் சமைத்து உண்ணும் காத்திருப்பு போராட்டத்தையும் நடத்தினர். பிறகு, இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கழிவுநீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
