tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

இன்று தனியார்துறை  வேலை வாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை, ஜூலை 10-  படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு, சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், ஜூலை 11 (வெள்ளிக்கிழமை) புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள், தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், வேலைநாடும் இளைஞர்கள் “தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்” www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான  குற்றங்கள் குறித்து  விழிப்புணர்வு கருத்தரங்கு

அரியலூர், ஜூலை 10-  அரியலூரிலுள்ள ஒரு தனியார் கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் 3 நாள்கள் நடைபெறும் கருத்தரங்கு புதன்கிழமை தொடங்கிது. இந்த கருத்தரங்கை கோட்டாட்சியர் கோவிந்தராஜ் தொடக்கி வைத்துப் பேசினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர்கள் கோமதி, அல்லி ஆகியோர் கலந்து கொண்டு பணியிடத்தில் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் வரதட்சணை தடுப்பு, குடும்ப வன்முறை தடுப்பு ஆகிய சட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  இந்த கருத்தரங்கில், நாகை மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சாரந்த அரசு மற்றும் பிற துறை சார்ந்த பெண் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட சமூக நல அலுவலர் அனுராபூ நடராஜமணி வரவேற்றார்.

மக்கள் தொடர்புத்  திட்ட முகாமில்  அரசு நலத்திட்ட  உதவிகள் வழங்கல் 

பெரம்பலூர். ஜூலை 9- பெரம்பலூர் அருகே, கொட்டரை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 175 பயனாளிகளுக்கு, ரூ.1.93 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட, கொட்டரை கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ் தலைமையில் 175 பயனாளிகளுக்கு ரூ.1.93 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாமில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்   தெரிவிக்கையில், கொட்டரை பகுதி பொதுமக்கள், கொட்டரை நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாதை வேண்டி வைக்கப்பட்டிருந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அந்தப் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  மிகவிரைவில் பணி முடிவுற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் இந்தப் பகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் மிக விரைவில் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார். முன்னதாக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ந.கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை துறை இணை இயக்குநர் பாபு உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தென்னை சாகுபடியில்  நவீன தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம்

புதுக்கோட்டை, ஜூலை 10-  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பில், தென்னை சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தொடங்கி வைத்து, கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, தொழில்நுட்பக் கையேட்டினை வெளியிட்டார். பின்னர் அவர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தோட்டக்கலை மலைப்பயிரான தென்னை விவசாயிகளால் 14,155 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தென்னை சாகுபடியின் போது ஊடுபயிராக வாழை, காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் ஆகியவை சாகுபடி செய்வதால் விவசாயிகள் கூடுதலாக வருமானம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கிறது. இக்கருத்தரங்கத்தில், மொத்தம் 15 விவசாயிகளுக்கு ரூ.27.39 லட்சம் மானியத்துடன் வேளாண் இடுபொருட்கள், மரக்கன்றுகள் மற்றும் ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.  புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், இணை இயக்குநர் (வேளாண்மை) மு.சங்கரலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.