tamilnadu

img

போலீஸ் விசாரணைக்குச் சென்ற பட்டியலின இளைஞர் சடலமாக மீட்பு காவல் நிலையத்தை குடும்பத்தினர் முற்றுகை

போலீஸ் விசாரணைக்குச் சென்ற பட்டியலின இளைஞர் சடலமாக  மீட்பு காவல் நிலையத்தை குடும்பத்தினர் முற்றுகை

மதுரை, அக்.10- மதுரை அண்ணாநகர் காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட யாகப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் - முத்துலெட்சுமி தம்பதி. இவர்களது  ஒரே மகன்  மூன் தினேஷ்குமார் (30).  இவர் ஐடிஐ படித்துவிட்டு வெள்ளரி பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். தினேஷ்குமார் மீது சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.  அக்டோபர் 9 வியாழனன்று அதிகாலை 5 மணியளவில் தினேஷ்குமாரின் வீட்டிற்கு அண்ணாநகர் காவல் ஆய்வா ளர் பிளவர் ஷீலா தலைமையில் தனிப்படை காவலர்களான காமு, நாகராஜ் ஆகியோர் வந்தனர்.அவர்கள் தினேஷ்குமாரை கஞ்சா வழக்கு தொடர்பான விசாரணை எனக் கூறி அழைத்துச்சென்றுள்ளனர்.தினேஷ்குமாருடன்  அஜித்கண்ணா, பிரகாஷ் ஆகிய 3 பேரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் மதியம் 1 மணியளவில் அண்ணாநகர் காவல்துறையினர் தினேஷ்குமாரின் தந்தையை காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர். அப்போது தனது மகன் தினேஷ்குமார் குறித்து காவல்துறையினரிடம்  தந்தை கேட்டுள்ளார். அப்போது, தினேஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேரை மதுரை வண்டியூர் அம்மா திடல் அருகே உள்ள புற காவல் நிலையத்தில் வைத்து அண்ணா நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தியதாகவும் அப்போது விசாரணை முடித்துவிட்டு அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வருவதற்காக காவல்துறை வாகனத்தில் ஏற்றிய போது தினேஷ்குமார் காவல் துறையினரிடம் இருந்து தப்பியோட முயன்றார் என்றும் வைகையாற்றுக்கு தண்ணீர் செல்லும் வண்டியூர்  வாய்க்காலில் குதித்து நீரில் மூழ்கி இறந்ததாகவும், பின்னர் அவரது சடலத்தை தீயணைப்புத் துறையினர் மூலமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தினேஷ்குமாரின் பெற்றோர் அண்ணாநகர் காவல்துறையினர் தனது மகனை விசாரணை என்ற பெயரில் அடித்துக்கொன்றுவிட்டதாக கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தினேஷ்குமாரின் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள்,  தினேஷ்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் தினேஷ்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறி அண்ணாநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரது உறவினர்களை தினேஷ்குமாரின் சடலத்தை பார்க்க பிணவறைக்கு  காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.அப்போது 5 மணியளவிலயே பிணவறைக்கு தினேஷ்குமாரின் சடலத்தை ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டுவந்துள்ளனர். இது குறித்து தினேஷ் குமாரின் பெற்றோர் கூறுகையில்,  தனது மகனை காலையில் காவல்துறையினர் விசாரணை என அழைத்துச் சென்ற பின்னர் 1 மணியளவில்  வாய்க்காலில் விழுந்து உயிரிழந்து விட்டதாக கூறுகிறார்கள் .எனது மகனுக்கு நீச்சல் தெரியும். ஆனால் காவல்துறையினர் பொய்யான காரணத்தை கூறி தனது மகன் உயிரிழந்து விட்டதாக கூறுகிறார்கள் . தனது மகனை காவல்துறையினர் விசாரணையின் போது அடித்துக்கொலை செய்து விட்டதாக சந்தேகம் வருகிறது. எனவே விசாரணைக்காக அழைத்துச் சென்ற அண்ணா நகர் காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவல்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யும் வரை உடலை பெற மாட்டோம் என்று தெரிவித்தனர்.