tamilnadu

img

காவல்துறையினருக்கு வீரவணக்க நாள்: மலர்வளையம் வைத்து அஞ்சலி

காவல்துறையினருக்கு வீரவணக்க நாள்: மலர்வளையம் வைத்து அஞ்சலி 

அரியலூர், அக். 21-  இந்தியா முழுவதும் பல்வேறு இன்னலான பணிகளுக்கிடையே, வீரமரணம் அடைந்த 191 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் நினைவாக, காவலர் வீரவணக்க நாள் அக்டோபர் 21 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.  அதனையொட்டி, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஷ் பா.சாஸ்திரி   தலைமையில், ஆயுதப்படை மைதானத்தில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இரா. முத்தமிழ்செல்வன், போலீஸ் துணை சூப்பிரண்டு சாலை இராம் சக்திவேல் ரவிச்சந்திரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், ஊர்க்காவல் படை திருச்சி சரக உதவி தளபதி ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் பணியின் போது உயிர் நீத்த 5 காவல்துறையினரின் குடும்பத்தினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தஞ்சாவூர்  தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல்ஹக் தலைமையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம், தலைமையக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர், ஆயுதப்படை காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் உயர்நீர்த்த காவல் ஆளிநர்களின் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.