பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிப்பு
பெரம்பலூர், ஜூலை 31- பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அந்த மனுவில், பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஈச்சம்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசித்து வருகிறோம். இந்நிலையில், பாண்டியன் என்பவர் 2020 ஆம் ஆண்டு ஈச்சம்பட்டி கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை துவங்குவதாக தகவல் தெரிந்து, குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், குடிநீர் வடிகால் வாரியம், முதலமைச்சர் தனிபிரிவு ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, அப்போது அகிரிகாரிகள் துவங்கப்பட இருந்த சுத்திகரிப்பு ஆலை துவங்க அனுமதி தரவில்லை. இந்நிலையில், குரும்பலூர் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் மூலம் தற்போது தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் சுத்திகரிப்பு குடிநீர் ஆலையை துவக்க உள்ளனர். எனவே மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த ஆலையை நிரந்தரமாக மூட, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.