செப்.9, 10 பெரம்பலூரில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம்
பெரம்பலூர், ஆக. 24- பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், செப்.9, 10 ஆகிய இரண்டு நாட்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர் கூட்டரங்கத்தில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சி மொழிக் கருத்தரங்கம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறவுள்ளது. செப்.9 அன்று மாவட்ட வருவாய் அலுவலரின் பயில ரங்கத் தொடக்க உரையைத் தொடர்ந்து, பயிலரங்கத்தில் ஆட்சிமொழிச் சட்டம் வரலாறு, ஆட்சிமொழி செயலாக்கம் அரசாணைகள், மொழிபெயர்ப்பு கலைச் சொல்லாக்கம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், மொழிப்பயிற்சி, கணினித் தமிழ் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. செப்.10 அன்று பிற்பகல் 3 மணிக்கு ஆட்சிமொழிக் கருத்தரங்கம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடை பெற உள்ளது. ஆட்சிமொழிக் கருத்தரங்கம் குறித்து அரசு அலுவலர்கள் கருத்துரை வழங்க உள்ளனர். இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பெரம்பலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சி.சுகன்யா செயல்படுவார். அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு அலுவலர்கள், பணியாளர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருள்ராஜ் தெரிவித்துள்ளார்.
அரசு பல்நோக்கு மருத்துவமனை ரூ.136 கோடியில் கட்டுமான பணிகள் தீவிரம்
தூத்துக்குடி, ஆக.24- தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டுமான பணி களை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் செந்தில்குமார் ஆய்வு செய்தார். தூத்துக்குடி காமராஜ்நகரில் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் நவீன அறுவை சிகிச்சை அரங்கங்கள், குழந்தைகள் பிரிவு, இருதய பிரிவு, குடல், ஈரல் பிரிவு, பரி சோதனை கூடங்கள் என அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய அரசு பல்நோக்கு மருத்துவமனை ரூ.136 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதனை விரைவில் முதல்-மைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சுகா தாரத்துறை செயலாளர் டாக்டர் செந்தில்குமார் சனியன்று புதிய அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடந்து வரும் இறுதி கட்ட பணிகளையும், கட்டிடப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்ட செந்தில்குமார், அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது ஆட்சியர் இளம்பகவத், மருத்துவ கல்லூரி முதல்வர் சிவகுமார், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி மற்றும் மருத்துவர்கள் உட னிருந்தனர்.
முழுமையாக கட்டப்படாத சாக்கடை வாறுகால் கொசுக்களால் கிராம மக்கள் அவதி
தென்காசி, ஆக.24- தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா செவல்குளம் கிராமம் கோபாலகிருஷ்ணபுரம் தெருவில் சாக்கடை வாறுகால் முழுமையாக கட்டி முடிக்கப்பட வில்லை . இதனால் பல வருடங்களாக சாக்கடை வாறு காலில் கழிவுநீர் தேங்கிக்கிடக்கும் நிலை உள்ளது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர். அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையில் மனு கொடுத்தும் இதுவரையில் எவ்வித நட வடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து சிபிஎம் திருவேங்கடம் தாலுகா செய லாளர் கருப்பசாமி மற்றும் கோபாலகிருஷ்ணபுரம் கிளை செயலாளர் ரமேஷ் ஆகியோர் கூறுகையில் ,சாலைகளை முறையாக சர்வே செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போதுமான இடம் கிடைக்கும். அதிகாரிகள் மழைக்கா லத்திற்கு முன்பாகவே வாறுகால் பணியை முடிக்க வேண்டும். பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. வீட்டிற்குள் செல்கையில் சாக்கடை நீரை மிதித்தே நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. என்று தெரிவித்துள்ளனர்.
விவி டைட்டானியம் ஆலையில் தொழிலாளி மரணம்: மக்கள் மறியல்
தூத்துக்குடி, ஆக.24- தூத்துக்குடியில் உள்ள விவி டைட்டானியம் என்கிற தனியார் ஆலையில் ஊழியர் மரணமடைந்ததால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மீளவிட்டான், யாதவர் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் மாரியப்பன் (52). இவர் விவி டைட்டானியம் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஆகஸ்ட் 22 வெள்ளியன்று பணியில் இருந்தபோது மாலை 4 மணி யளவில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படு கிறது. தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர். தகவலின் பேரில் சிப்காட் காவல்துறையினர் அவரது உடலை கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாரியப்பன் பணி செய்தபோது சல்பர் டை ஆக்சைடு கசிவுனால் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார். இதற்கு அந்த நிறுவனம் தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மீளவிட்டான் பகுதி மக்கள் சாலை மறிய லில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கை விடப்பட்டது.