ரூ. 37.38 கோடியில் புதிய விளையாட்டு மைதானங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்
சென்னை, ஆக. 14 - ரூ. 37.38 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய விளையாட்டு மைதானங்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (ஆக.14) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி முறையில் திறந்து வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் திறப்பு விழா நடைபெற்ற இம்மைதானங்களில், புதுக்கோட்டை, திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 9 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கங்கள் அடங்கும். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் திருவரங்குளம் கிராமத்தில் 6.42 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இவ்விளையாட்டரங்கத்தில் 400 மீட்டர் தடகள பாதை, கால்பந்து மைதானம், கையுந்துப் பந்து ஆடுகளம், நீளம் தாண்டுதல் பகுதி, பார்வையாளர்களுக்கான இருக்கைகள், உடற்பயிற்சி கூடம், உடை மாற்றும் அறை, நிர்வாக அலுவலகக் கட்டடம் ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் நிம்மியம்பட்டு கிராமத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டரங்கத்தில் 400 மீட்டர் தடகளப் பாதை, கால்பந்து மைதானம், கையுந்துப் பந்து, கூடைப்பந்து, கபாடி, கோ-கோ ஆடுகளங்கள், நீளம் தாண்டுதல் பகுதி, தடைகள் தாண்டும் ஓடுதளப்பாதை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் சிவன்மலை கிராமத்தில் 6.56 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டரங்கத்தில் இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம், கையுந்துப் பந்து, கூடைப்பந்து, கபடி ஆடுகளங்கள், உடற்பயிற்சிக்கூடம் ஆகிய வசதிகள் உள்ளன. தென்காசி மாவட்டத்தில் 15 கோடி ரூபாய் செலவில் பட்டக்குறிச்சி கிராமத்தில் 20.46 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு விளையாட்டு வசதிகளுடன் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில், 400 மீட்டர் தடகள ஓடுபாதை, நீளம் தாண்டுதல், கையுந்துப் பந்து உள்விளையாட்டரங்கம், கபாடி ஆடுகளம், கூடைப்பந்து ஆடுகளம், கால்பந்து மைதானம், நவீன உடற்பயிற்சி கூடம், நிர்வாக அலுவலகக் கட்டடம், உணவகம் ஆகிய வசதிகள் அடங்கும். சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் 6 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் ஐந்து பாரா-விளையாட்டு மைதானங்கள் கட்டப்பட்டுள்ளன. இம்மைதானங்களில் பாரா-விளையாட்டு அரங்கம், பாரா இறகுப்பந்து, உட்கார்ந்து விளையாடும் பாரா கையுந்துபந்து, பாரா டேபிள் டென்னிஸ், பாரா போச்சியா, பாரா டேக்வொண்டோ, பாரா ஜுடோ ஆடுகளம், பாரா கோல்பால் ஆகிய விளையாட்டுகளுக்கான வசதிகள் மற்றும் சக்கர நாற்காலிகளுடன் அணுகும் வகையிலான சாய்வுதளம் கொண்ட கழிப்பறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 7 கோடி ரூபாய் செலவில் மாணவர்களுக்கான ஹாக்கி விளையாட்டு முதன்மை நிலை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 60 மாணவர்களுக்கான தங்கும் வசதியுடன் கூடிய அறைகள், உணவு உண்ணும் அறை, சமையலறை, இருப்பு அறை, தொலைக்காட்சி கூடம், பார்வையாளர் ஓய்வறை, காப்பாளர் அறை, அலுவலக அறை, விளையாட்டு உபகரணங்கள் வைப்பதற்கான இருப்பு அறை, படிப்பதற்கான அறை மற்றும் பொழுதுபோக்கு அறை ஆகிய வசதிகள், தரை மற்றும் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன.