பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், ஜூலை 7- வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் நடந்த பருத்தி மறைமுக ஏலத்தில், பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டாரம், ஆவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 1,356 விவசாயிகள் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்புடைய 2,180 குவிண்டால் பருத்தியை எடுத்து வந்தனர். மறைமுக ஏலத்தில் கும்பகோணம், செம்பனார்கோயில், பண்ருட்டி, விழுப்புரம், கொங்கணாபுரம், ஆந்திரா உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த 12 வணிகர்கள் கலந்து கொண்டு, குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ.7, 491, சராசரி ரூ.7,040, குறைந்தபட்சம் ரூ.6,509 என விலை நிர்ணயித்தனர். பருத்தி மறைமுக ஏலத்திற்கு விற்பனனக் குழு செயலாளர் சரசு தலைமை வகித்தார். பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சித்தார்த்தன் முன்னிலை வகித்தார். விற்பனைக் குழு பணியாளர்கள் ஏலத்திற்கான முன்னேற்பாடு பணிகளை செய்திருந்தனர்.
வாவுபலி பொருள்காட்சி நினைவு தூண் திறப்பு
குழித்துறை, ஜூலை 8- குழித்துறை நகராட்சியின் 100 ஆவது வாவுபலி பொருள்காட்சி நினைவு தூண் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. வாவுபலி பொருள்காட்சி மைதானம் அருகாமையில் தபால் நிலைய சந்திப்பில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் 100 ஆவது வாவுபலி பொருள்காட்சி நினைவுத் தூண் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தார். விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பர்ட், நினைவுத் தூணை திறந்து வைத்தார். இதில் நகராட்சி உறுப்பினர்கள் ஜெயந்தி, ஷாலின் சுஜாதா, லலிதா, ஆட்லின் கெனில், விஜூ, விஜயலெட்சுமி, மினிகுமாரி, ரோஸ்லெட், ஜூலியட் மெர்லின் ரூத், லில்லி புஷ்பம், ரத்தினமணி, ஜலீலா ராணி, செல்வகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.