திருப்பூர், அக். 18 - திருப்பூர் ஊத்துக்குளி சாலை கருமாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஜக பிரமுகர் செந்தில் குமார். இவர் ஸ்ரீ பரமேஸ்வரா தீபாவளி சிறப்புத் திட்டம் என்ற பெயரில் கடந்த நான்கு ஆண்டுகளாக, அப்பகுதி பொதுமக்களிடம் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளிச் சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. தற்பொழுது தீபாவளி சீட்டு நிறைவடைந்து, பொருட்கள் வழங்க வேண்டிய நிலையில், செந்தில்குமார் தலைமறைவாகி விட்டார். சுமார் 3 கோடி ரூபாய் சீட்டுப் பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும், பொது மக்களை ஏமாற்றிய நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெள்ளிக்கிழமையன்று ஊத்துக்குளி சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாஜகவைச் சேர்ந்த செந்தில் சீட்டு நடத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் மோசடி செய்திருக்கிறார் என்றும், அவர் ஈரோட்டில் 500-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் கருமாரம்பாளையம் பகுதியில் சீட்டு நடத்தி மோசடி செய்து தலைமறைவு ஆனவர் பாரதிய ஜனதா கட்சியில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லை என்று அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்வேல் மறுப்புத் தெரிவித்து காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஆனால் செந்தில்குமார் இங்கிருக்கும் பாஜக அலுவலகத்தில்தான் வருடக்கணக்கில் தங்கி இருந்தார். மேலும் பாஜகவின் பிளக்ஸ் தட்டிகளில் அவரது படமும் இடம் பெற்றிருந்தது. இன்று மோசடி வெளிவந்த நிலையில்தான் அவரது படத்துடன் இருந்த தட்டிகளில் மோடி, அண்ணாமலை ஆகியோர் படங்களை அழித்துவிட்டனர். பாரதிய ஜனதா கட்சியில் இல்லை என்று சொல்வது யாரை ஏமாற்றுவதற்கு? என்று மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.