பேராவூரணியில் ரூ.4 கோடியில் வளர்ச்சிப் பணிகள் எம்.பி, எம்எல்ஏ துவக்கி வைத்தனர்
தஞ்சாவூர், ஆக 3- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி, புதிய பேருந்து நிலையம் அருகில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதிய வாரச்சந்தை ரூ.2 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. மேலும், பேராவூரணி ஒன்றியம், காலகம் ஊராட்சி, ஊத்தப்பள்ளம்-பட்டுக்கோட்டை இணைப்பு சாலை, முதலமைச்சர் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.81 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்படுகிறது. இதேபோல, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கழனிவாசல் ஊராட்சி, ஆற்றங்கரை சாலை ரூ.31 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை, சனிக்கிழமை, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் தலைமை வகித்து துவக்கி வைத்தனர்
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தென்காசி, ஆக 3- தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த்தின் பரிந்துரையின்படி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் பிறப்பித்த உத்தரவால் ஒரே நாளில் நான்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல்துறை யினரால் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர் சுந்தரபாண்டியபுரம் முத்தையா என்பவரின் மகன் சுடலை மணிகண்டன். பாவூர்சத்திரம் காவல்துறையினரால் கொலை முயற்சி மற்றும் ஆயுத தடைச் சட்ட வழக்கில் எல்லைப்புளி ஐயப்பன் என்பவரின் மகன் பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புளியங்குடி அனைத்து மகளிர் காவல்துறையினரால் போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் திருவேட்டநல்லூர் கற்பகநாச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் ராமர். அய்யாபுரம் அரண்மனை தெருவை சேர்ந்த ரத்தினசாமி என்பவரின் மகன் செல்லசாமி ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் எஸ்.அரவிந்த் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவிட்டார். அதன் பேரில் நான்கு நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடத்த முயன்ற 2,975 கிலோ பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி, ஆக. 3- மணப்பாடு அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் ரூ.75 லட்சம் மதிப்புள்ள பீடி பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் கடற்கரை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட மணப்பாடு வடக்கே கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலை பண்டல்கள் கண்டெய்னர் வாகனத்தில் இருந்தன. தலா 35 கிலோ எடை கொண்ட 85 மூடைகளில் 2975 கிலோ பீடி இலை பண்டல்களை உதவி ஆய்வாளர் ரவிசங்கர் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதி்ப்பு ரூ.75 லட்சம் என்று கூறப்படுகிறது.
வடிகால் வாய்க்கால் பக்கவாட்டுச் சுவர் சாய்ந்து விழுந்த அவலம்
அறந்தாங்கி, ஆக 3- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யில், கடந்த 15 தினங்களுக்கு முன்னதாக போடப்பட்ட மழைநீர் வடிகால் வாய்க்கால் 2 மணி நேர மழைக்கு தாங்காமல் பக்கவாட்டுச் சுவர் சாய்ந்து விழுந்தது. அறந்தாங்கி நகராட்சியில் உள்ள 15 ஆவது வார்டு கணபதி நகர் பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு, கடந்த 15 தினங்களுக்கு முன் மழை நீர் வடிகால் வாய்க்கால் ஒன்று, பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. வெள்ளியன்று இரவு, அறந்தாங்கி பகுதியில் சுமார் 2 மணி நேரம் பெய்த மழைக்கு தாங்காமல், அந்த வாய்க்கால் பக்கவாட்டுச் சுவர் இடிந்து சாய்ந்து விட்டது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த மழை நீர் வடிகால் வாய்க்காலை நல்ல முறையில் புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரியுள்ளனர்.