மக்களிடம் அடாவடியாக வசூல் வேட்டையில் ஈடுபடும் மைக்ரோ பைனான்ஸ் கம்பெனிகளின் மீது நடவடிக்கை எடுக்க மாதர்சங்கம் வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 28- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பாலக்கரை பகுதிக் குழு 17 ஆவது மாநாடு ஞாயிறன்று செந்தண்ணீர்புரத்தில் நடந்தது. மாநாட்டிற்கு காயத்திரி தலைமை தாங்கினார். சங்கக் கொடியை மும்தாஜ் ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை ரேகா வாசித்தார். வேலை அறிக்கையை மாவட்டப் பொருளாளர் ராகிலாபானு வாசித்தார். மாவட்ட தலைவர் பொன்மகள் துவக்க உரையாற்றினார். மாநிலச் செயலாளர் தமிழ்ச்செல்வி, முன்னாள் மாவட்டச் செயலாளர் ரேணுகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில், நியாயவிலைக் கடைகளில் கைரேகைகள் மூலம் பொருட்கள் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு மாற்று வழியில் பொருட்களை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னும், ஆர்பிஐ விதிகளை மீறி குண்டர்கள் மூலம் அடாவடியாக மக்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடும் மைக்ரோ பைனான்ஸ் கம்பெனிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், தலைவராக எஸ். ராகிலாபானு, செயலாளராக ஆர். வனிதா, பொருளாளராக பி. ரேகா உட்பட 13 பேர் கொண்ட பகுதிக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநகர் மாவட்டச் செயலாளர் சரஸ்வதி நிறையுறையாற்றினார். செயலாளர் வனிதா நன்றி கூறினார்.