tamilnadu

நடக்க முடியாத மகனுக்கு சிகிச்சை அளிக்கக் கோரி தாய் தீக்குளிக்க முயற்சி

நடக்க முடியாத மகனுக்கு  சிகிச்சை அளிக்கக் கோரி  தாய் தீக்குளிக்க முயற்சி

தஞ்சாவூா், அக். 6-  தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திங்கள்கிழமை வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள், தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர். அப்போது ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த அய்யம்பேட்டை அருகே உள்ள மாத்தூரை சேர்ந்த சாரதா(42) என்பவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து அதிலிருந்து மண்ணெண்னையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் விரைந்து சென்று, சாரதாவிடம் இருந்து பாட்டிலை பறிமுதல் செய்து உடல் மீது தண்ணீர் ஊற்றினர். இதுகுறித்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியயதில் சாரதா, “தனக்கு இரண்டு மகள்கள், 1 மகன்  உள்ளனர். கணவர் கூலி வேலை செய்து வருகிறார். தனது மகன் தற்போது பாலிடெக்னிக் படித்து வருகிறார். எனது மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது கீழே விழுந்ததில் வலது முட்டி அடிபட்டது. இதையடுத்து எனது மகனை திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால், அங்கு எங்களை ஏமாற்றி எனது மகனின் வலது கால் முட்டியை அகற்றி விட்டனர். அதன் பின்னர் தற்போது வரை பல இடங்களில் மருத்துவம் செய்தும் என் மகனை நடக்க வைக்க முடியவில்லை. இதனால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் வைத்து மகனுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் விரக்தி அடைந்து மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றேன்’’ என்று கூறினார். இதையடுத்து, சாரதாவிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.