tamilnadu

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திரக் குறைதீர் கூட்டம் நடப்பதில்லை

மாற்றுத்திறனாளிகளுக்கான  மாதாந்திரக் குறைதீர் கூட்டம் நடப்பதில்லை

கும்பகோணம், ஆக. 29-  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம் ஒன்றியங்களில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள், அரசு சலுகைகளைப் பெற கும்பகோணம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் மாதாந்திர மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் கோரிக்கை மனுக்களை வழங்கி வந்தனர்.  ஆனால் எவ்வித அறிவிப்பும் இன்றி, சில மாதங்களாக மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் கும்பகோணத்தில் நடைபெறவில்லை. இது சம்பந்தமாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  கும்பகோணத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் துறை அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், போக்குவரத்து அதிகாரிகள் வருகை தந்து, மாற்றுத் திறனாளிகளின் உரிமை குறித்து கோரிக்கை வைத்து வந்தனர். இதில், உடனடி தீர்வாக பேருந்து பாஸ், அடையாள அட்டை உள்ளிட்ட கோரிக்கைகளை வருவாய்த்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் ஏற்பாடு செய்தனர்.  இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கும்பகோணத்தில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறவில்லை. ஆனால், இது சம்பந்தமாக மாற்றுத்திறனாளிகள் சங்க பொறுப்பாளர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, கிராமம் தோறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அங்கு சென்று உங்களது கோரிக்கைகளை வைத்துக் கொள்ளுங்கள் என்றும், கும்பகோணத்தில் நடைபெறும் மாதாந்திர மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் வாய்மொழி உத்தரவாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.  உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அனைத்து துறை சார்ந்த கோரிக்கைகளை வைத்து, முகாம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட தனி அலுவலர்களோ, மருத்துவர்களோ, போக்குவரத்துத் துறையினரோ, அதிகாரிகளோ வருவதில்லை. பெயரளவில் தன்னார்வலர்களை வைத்துக்கொண்டு முகாம் நடைபெறுகிறது என குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.  இருப்பினும் அந்தந்த பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை, இருசக்கர வாகனம் போன்ற உதவிகள் கேட்டு விண்ணப்பித்திருந்தாலும் விண்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு தீர்வு காணவில்லை என தெரியவருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கென எப்போதும் வழக்கம் போல் நடைபெறும் மாதாந்திர சிறப்பு கூட்டம் இடைவிடாது நடைபெற வேண்டும் எனவும், அதில் வைக்கப்படும் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.  மேலும் சங்க பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என தெரிவித்திருப்பதை, தமிழக முதல்வர் தலையிட்டு மறுபரிசீலனை செய்து, திருத்தி அமைக்கப்பட்ட உத்தரவை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.