tamilnadu

img

மக்களவைக்கு வராமல் ஒளிந்து கொண்ட மோடி பதிலுரை இல்லாமலேயே நிறைவேறிய நன்றி தெரிவிக்கும் தீர்மானம்!

மக்களவைக்கு வராமல் ஒளிந்து கொண்ட மோடி பதிலுரை இல்லாமலேயே நிறைவேறிய நன்றி தெரிவிக்கும் தீர்மானம்!

பிரதமரைத் ‘தாக்க’ எதிர்க்கட்சிகள் சதியாம்; சபாநாயகர் கூப்பாடு!

புதுதில்லி, பிப். 5 - பிரதமர் மோடி அவைக்கு வராத தால், அவரது பதிலுரை இல்லாம லேயே, மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அவலம் அரங்கேறியது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி புதன்கிழமை மாலை 5 மணிக்கு பதிலளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக் காததுடன், சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் நடத்திய போராட்டம் காரணமாக, பிரதமர் மோடி மக்களவையிலிருந்து வெளியேறினார். எனினும் அவர் வியாழக்கிழமை யன்று பதிலளிப்பார் என எதிர்பார்க் கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி மக்களவைக்கு வரவில்லை. இது பற்றி கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “பதில் சொல்வதற்குப் பயந்து தான், பிரதமர் மோடி அவைக்கு வருவதைத் தவிர்த்து விட்டார்!” என குற்றம் சாட்டினார். அதற்குப் பதிலளித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “பிரதமர் மோடியை அவைக்கு வர வேண்டாம் என்று நான்தான் கூறினேன்” என்று தெரிவித்தார். மேலும், ‘”பிரதமர் பதில் சொல்லும்போது அவரது இருக்கை அருகில் விரும்பத்தகாத செயலில் ஈடுபட காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்ட மிட்டிருந்தனர். எதிர்க்கட்சிகளின் செயலை தவிர்க்கவே, நான் பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என கேட்டுக்கொண்டேன். எஸ். ஜோதி மணி, ஆர். சுதா உள்ளிட்ட 6 காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் பிரதமரை முற்றுகையிட திட்டமிட்டிருந்தனர்” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். சபாநாயகரின் பேச்சுக்கு ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம், சீன விவகாரம் குறித்து நரவனே-யின் புத்தக வாக்குமூலம் ஆகியவற்றை திசைத்திருப்பவே சபாநாயகர் இவ்வாறு சர்ச்சையைக் கிளப்புவதாக குற்றம் சாட்டினர். “பிரதமரைத் தாக்க முயற்சித்ததாக சபாநாயகர் கூறுவது அப்பட்டமான பொய். சபாநாயகர் ஓம் பிர்லாவை பொய் பேச வைக்கிறது பாஜக அரசு!” என்றும் தெரிவித்தனர். இதனிடையே, மக்களவையைப் புறக்கணித்த பிரதமர் மோடி, மாலையில் மாநிலங்களவைக்குச் சென்றார். ஆனால், அங்கும் எதிர்க் கட்சிகள் தங்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து முழக்கங்களை எழுப்பிய நிலையில், அவற்றைக் கண்டும் காணாதது போல, “தேச நலன், அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கான அறிவிப்புகள் குடியரசுத் தலைவர் உரையில் உள்ளன. உலக நாடுகளின் பிரச்சனைகளையே தீர்க்கும் அளவிற்கு வலிமைமிக்க நாடாக இந்தியா விளங்குகிறது; உலக பொரு ளாதாரத்தில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். 9 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள் ளோம்” என்று குடியரசுத் தலைவர் உரை தொடர்பான விவாதம் மீது ஒப்புக்கு பதிலுரை ஆற்றினார். முன்னதாக மக்களவை 2 முறை  ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங் களவையிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் வெளிநடப்பு செய்தனர்.