மருத்துவ மாணவிக்கு எம்எல்ஏ நிதியுதவி
தஞ்சாவூர், ஆக. 9- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேதுபாவாசத்திரம் ஒன்றியம், இரண்டாம்புளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையன் - ரேவதி தம்பதி. இவர்களுக்கு பிரியதர்ஷினி என்ற மகளும், நிதிஷ் என்ற ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கருப்பையன் தூத்துக்குடி பகுதியில் அடுப்புக்கரி தயாரிக்கும் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவரது மனைவி ரேவதி கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். ஏழ்மை நிலையில் புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் இவர்கள், வீட்டைக் கூட முழுமையாக கட்ட முடியாமல், ஒரு சிறிய அறையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவி கரிசவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து, தமிழக அரசின் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவக் கல்லூரியில் (பி.டி.எஸ்) பல் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகியுள்ளார். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவி பிரியதர்ஷினிக்கு அவர் படித்த கரிசவயல் பள்ளி ஆசிரியர்கள் உதவி செய்து உயர் கல்விக்கு வழிகாட்டி உள்ளனர். மாணவியின் நிலை குறித்து தகவல் அறிந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், சனிக்கிழமை நேரில் சென்று மாணவியை சந்தித்து பொன்னாடை அணிவித்து நிதி உதவி வழங்கினார். அப்போது கரிசவயல் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பழனித்துரை, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பி.ஆர்.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மாணவி பிரியதர்ஷினிக்கு உதவ விரும்புவோர் 8248360471 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.