முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய பணிக்கு அமைச்சர் அடிக்கல்
மயிலாடுதுறை, ஜூலை 29- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம், செம்பனார்கோவில் ஆகிய வட்டாரங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.1 கோடியே 72 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கோகுல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். செம்பனார்கோவில் வட்டாரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் சங்கரன்பந்தல் ஊராட்சியில் ரூ.78 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கூடுதல் கட்டிடம் கட்டுதல் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து, தொடர்ந்து, காட்டுச்சேரி ஊராட்சியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம், குத்தாலம் வட்டாரத்தில் பெரம்பூர் ஊராட்சியில் மேலபெரம்பூர் கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம், பெருஞ்சேரி ஊராட்சியில் சுந்தரப்பஞ்சாவடி கிராமத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழலகம், கோமல் ஊராட்சியில் செம்பியன்கோமல் கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம், மருதூர் ஊராட்சியில் கோட்டூர் கிராமத்தில் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கோட்டூர் அங்கன்வாடி கட்டிடம், தேரழந்தூர் ஊராட்சியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம், அசிக்காடு ஊராட்சியில் ரூ.12 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கட்டிடம் என மொத்தம் ரூ.1 கோடியே 72 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.அஜீத் பிரபுக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.