தமிழக அரசுக்கு அனுமதி வழங்க ஒன்றிய அரசுக்கு அமைச்சர் கடிதம்!
உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு காலியிடங்கள் நிரப்புதல்
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள 24 காலி இடங்களை நிரப்புவதற்கு மாநில அரசை அனுமதிக்குமாறு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு, தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார். “உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், உயர் சிறப்பு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 50 விழுக்காடு இடங்கள், தமிழ்நாட்டில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கான 24 பணியிடங்கள் காலியாக உள்ளன” என்று தெரிவித்துள்ளார். “எனவே, உயர் சிறப்பு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள 24 காலி இடங்களை நிரப்புவதற்கு, அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு நீட்டிக்கப்பட்ட சுற்றுக் கலந்தாய்வை நடத்தவும், இந்த செயல்முறையை 2025 ஆகஸ்ட் 5-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் முடிக்கவும், மாநில அரசை அனுமதிக்குமாறு தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு உறுதி செய்யவேண்டும்” என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.