tamilnadu

img

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

சிதம்பரம் இரவிச்சந்திரன்  குழுக்களாக வாழும் பாலூட்டிகள் நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றன என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. பாலூட்டிகளின் சமூக வாழ்வு மற்றும் ஆயுளுடன் தொடர்புடைய 31 மரபணுக்களை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். யானைகள், வரிக்குதிரைகள் போன்ற விலங்குகளின் வாழ்நாள் தனியாக வாழும் விலங்குகளின் ஆயுட்காலத்தை விட அதிகமாக உள்ளது. சீனா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 974 வகையான பாலூட்டிகளின் ஆயுள் மற்றும் அவற்றின் சமூக வாழ்வை ஒப்பிட்டு ஆராய்ந்தனர். இதற்காக விலங்குகள் தனித்து வாழ்பவை, இணையாக வாழ்பவை மற்றும் குழுக்களாக வாழ்பவை என்று மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன. யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள் போன்றவை தனியாக வாழும் போயர் இனப் பழங்குடியினத்தவரால் நிலப்பன்றி என்றும் அழைக்கப்படும் தென்னாப்பிரிக்காவில் வாழும் அழகற்ற தோற்றம் உடைய ஆர்ட்வார்க் (Aardvark), வட மற்றும் தென்னமெரிக்காவில் வாழும் ஈஸ்டர்ன் சிப்மங்க்  (Eastern chipmunk) போன்றவற்றை விட சராசரியாக அதிக காலம் வாழ்கின்றன. விலங்குகளின் உடல் அளவிற்கும் வாழும் காலத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு பற்றி ஆராயப்பட்டது. மூஞ்சூறும் திமிங்கலமும் இரண்டாண்டுகள் வரை மட்டுமே வாழும் மூஞ்சூறுகள் (Shrews) முதல் 200 ஆண்டுகள் வாழும் வில்தலை திமிங்கலம் (Bowhead whale) வரை பாலூட்டிகளின் ஆயுட்கால அளவு வேறுபடுவது தெரியவந்துள்ளது. தனித்தே வாழும் நார்த்தெர்ன் குறுவால் மூஞ்சூறுகள் (Northern short tailed shrew), குழுவாக வாழும் கிரேட்டர் ஹார்ஸ் ஷூ வௌவால்கள் (Greater horseshoe bats) ஒரே உடல் எடை உடையவை. ஆனால் மூஞ்சூறுகள் இரண்டாண்டுகள் மட்டுமே வாழ்கின்றன.

ஹார்ஸ் ஷூ வௌவால்கள் 30 ஆண்டுகள் வாழ்கின்றன.  94 உயிரினங்களின் மரபணுக்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆராயப்பட்டது. இவற்றில் 31 மரபணுக்கள் இந்த விலங்குகளின் சமூக வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுடன் தொடர்புடையவை என்று கண்டறியப்பட்டுள்ளது.  இந்த மரபணுக்கள் முதன்மையாக நோய் எதிர்ப்பாற்றல் மற்றும் ஹார்மோன்களுடன் தொடர்புடையவை என்றாலும் இதில் ஹார்மோன்கள் விலங்குகளின் சமூக நடத்தையை நிர்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. குழுவாக கூடி வாழ்வதால் எதிரிகளிடம் இருந்து வரும் குறைவான அச்சுறுத்தல்,  பட்டினிக்கான குறைவான வாய்ப்புகள், குழு உறுப்பினர்களிடையில் உருவாக்கப்படும் வலுவான சமூகப் பிணைப்புகள் போன்றவற்றால் இறப்பு விகிதம் குறைகிறது.  இது நீண்ட ஆயுளுடன் வாழ வழிவகுக்கிறது. குழுவாக வாழ்வதில் இணையைக் கண்டுபிடிப்பதில் பிரச்சனை, உணவிற்கான போட்டி, குழுவில் இருக்கும் உயர்மட்ட தனி விலங்குகள் மூலம் ஏற்படும் அழுத்தம் மற்றும் சமூகத் தொடர்புகள் மூலம் ஏற்படும் தொற்றுநோய்ப் பரவல் போன்ற பாதிப்புகளால் கூடி வாழ்வதால் ஏற்படும் நீண்ட ஆயுள் குறைகிறது. சக்மா பஃபூன்கள் (Chacma baboons), சர்வதேச இயற்கை வள சங்கத்தின் (IUCN) ஆபத்தான நிலையில் இருக்கும் உயிரினங்களுக்கான சிவப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள செம்முக மந்தி (Rhesus macaques) போன்ற குறிப்பிட்ட விலங்குகளில் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வுகள் வலுவான சமூகப் பிணைப்புகள் உள்ள குழு விலங்குகளின் ஆயுட்காலம் பலவீனமான சமூக வாழ்க்கை வாழும் விலங்குகளின் ஆயுளை விட அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குழுவாக வாழாத விலங்குகளிடையிலும் சமூகத் தொடர்புகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. மஞ்சள் தொப்பை மார்மாட்கள் (yello bellied marmots) போன்ற சமூகத்தொடர்பு அதிகம் இல்லாத விலங்குகளில் அவற்றின் சமூக உறவிற்கும் நீண்ட ஆயுளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பது 2018இல் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்தது.

நீண்ட ஆயுளிற்கும் பரிணாம வளர்ச்சிக்கும் இடையில் இருக்கும் தொடர்பு பற்றி ஆராயப்படவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். புதிய வாரிசுகள் குறுகிய காலம் மட்டுமே வாழும் சில விலங்குகள் நீண்ட காலம் வாழும் விலங்குகளை விட அதிக இனப்பெருக்கம் செய்கின்றன. பரிணாமரீதியில் உயிரினங்கள் அவற்றின் வருங்காலத் தலைமுறைகளுக்கு மரபணுக்களைக் கடத்துகின்றன. இரண்டு ஆண்டு வாழும் ஒரு விலங்கும் இருநூறு ஆண்டு வாழும் திமிங்கலமும் அவற்றின் ஆயுளில் உருவாக்கும் புதிய வாரிசுகளின் எண்ணிக்கை ஒரே அளவாகவே இருக்கும் என்று க்யீன்ஸ்லாந்து பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் மற்றும் பரிணாம உயிரியலாளர் செலைன் ஃப்ரீயர் (Celine Frere) கூறுகிறார். இது பற்றி தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறுகிறார். வாழ்நாள் என்பது உயிரினங்களின் சூழல், இனப்பெருக்க உயிரியல், இணை சேரும் முறை போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது. தனித்து வாழ்ந்தாலும் கூடி வாழ்ந்தாலும் மற்றவர்களுடன் வாழ கற்றுக்கொள்ளவேண்டும். வாழ்வாதாரத்திற்காக மற்ற உறுப்பினர்களுடன் போட்டி போடவேண்டும். நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரை குழுவாக வாழும் பாலூட்டிகளில் குழு உருவாகும் விதம், குழுவின் அளவு போன்றவற்றால் அவற்றின் சமூக கட்டமைப்புகள் வேறுபடுகின்றன என்று கூறுகிறது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று மனிதகுலம் உருவாக்கிய சமூகக் கோட்பாடு பாலூட்டிகள் போன்ற உயர் வளர்ச்சியடைந்த விலங்குகளின் சமூக வாழ்விலும் செல்வாக்கு பெற்றுள்ளது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.