tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

மாரிக்குளம் பம்பிங் ஸ்டேசன்  பகுதியில் மேயர், ஆணையர் ஆய்வு

தஞ்சாவூர், ஜூலை 23 -  தஞ்சாவூர் பூக்காரத்தெரு விளார் சாலை மாரிக்குளம் பம்பிங் ஸ்டேசன் பகுதியில் திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், ஆணையர் கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  அப்போது, அடிக்கடி கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுவதைத் தடுக்கும் வகையில், போர்க்கால அடிப்ப டையில் பம்பிங் ஸ்டேசனில் புதிதாக மோட்டார் அமைத்து குழாய் பொருத்தப் படும். இதன் மூலம் கழிவு நீர் வெளியேறும் பிரச்சனை நிரந்தரமாக சரி செய்யப்படும் என்று தெரிவித்தனர்.  இதனைத் தொடர்ந்து பூக்காரத் தெரு, விளார் சாலை உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது, “அன்பு நகரில் சேதமடைந்த பேருந்து நிறுத்தம் அகற்றப்பட்டு, புதிதாக பயணிகள் நிழற்குடை அமைத்து பேருந்து நிறுத்தம் ஏற்படுத்தப்படும். சிந்து நகர் பூங்காவிற்கு சுற்றுச்சுவர் கட்டித் தரப்படும். லாயம் கிழக்கு தெரு வில் சேதமடைந்த பாலம் புதுப்பிக்கப்படும். சுப்பிரமணியசாமி கோவில் அருகே கடந்த பல ஆண்டு களாக பயன்படாமல் இருந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு சமுதாய நலக்கூடமாக மாற்றப்படும். முஸ்லிம் தெருவில் புதிய  பூங்கா, அய்யனார் கோவில் தெரு, கல்லுக்குளம் பகுதியில் புதிய சாலை  அமைத்துக் கொடுக்கப்படும். சேதம டைந்த விளார் சாலை புதுப்பிக்கப்படும். கல்லுக்குளம், கான்வென்ட் பகுதியில் பேருந்து நிறுத்தம் ஏற்படுத்தி தரப்படும்”  என்று மேயர், ஆணையர் தெரிவித்தனர்.

வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கி வைப்பு

அரியலூர், ஜூலை 24- அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் 34 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன. அரியலூர் சத்யா நகர், பெரியார் நகர், அழகப்பா நகர், சஞ்சீவிராயன் கோவில் தெரு, பெருமாள் கோயில் தெரு, கைலாசநாதர் தெரு, விளாங்காரத் தெரு, கருத்தான் தெரு, செல்லமுத்து தெரு, சிட்டிப்பாபு தெரு, குறிஞ்சான்குளத் தெரு, மேல அக்ராஹாரம் தெரு குபேரன் நகர், எண்ணெய்க்காரத் தெரு, கீழத்தெரு, சிந்தாமணித் தெரு, பெரியத்தெரு, முனியப்பா கோவில் தெரு, காந்தி சந்தை, அரியலூர் உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம், வகுப்பறை மற்றும் சாலை, ஆழ்துளை கிணறு உள்ளிட்ட 34 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சிக்கு அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், துணைத் தலைவர் கலியமூர்த்தி, அரியலூர் நகராட்சி ஆணையர் (பொ) அசோக்குமார்,நகராட்சி பொறியாளர்(பொ) ராஜகோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு  சிறப்பு குறைதீர் முகாம்

பெரம்பலூர், ஜூலை 24- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.  முகாமில் மாவட்ட ஆட்சியர், மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மற்றும் குறைகளை கேட்டறிந்தார். இதில் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு ஊரகப் பகுதிகளில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 100 நாட்கள் பணி வழங்கிட வேண்டும். அதற்கான முழு பணித் தொகையையும் வழங்க வேண்டும். இலவச வீட்டுமனைப் பட்டா, தொழிற் கடனுதவிகள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.  இக்கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். பின்னர், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 31 மனுக்களை பெற்றுக் கொண்டு, 6 பயனாளிகளுக்கு ரூ.49,898 மதிப்பிலான உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தரங்கம்பாடியில் முப்பெரும் விழா

மயிலாடுதுறை, ஜூலை 24 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு சிறந்த கல்வியாளர் விருது, பணி நிறைவு பாராட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. தரங்கம்பாடியில் அரசு உதவிபெறும் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் சைமன் பணி நிறைவு பாராட்டு விழா, சிறந்த கல்வியாளர் விருது உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 13 ஆம் பேராயர் டேனியல் ஜெயராஜ் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர்கள் ஜோனாஸ் குணசேகரன், தம்பையா பிரபுதாஸ், முன்னாள் கல்விக் கழக தலைவர் எர்ஸ்கின் ஜெயராஜ், தரங்கம்பாடி மறைமாவட்ட கண்காணிப்பு ஆயர் நவராஜ் ஆபிரகாம் ஆகியோர் பங்கேற்றனர். வில்சன் தன்ராஜ் வரவேற்றார். பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன், தலைமை ஆசிரியர் பணி நிறைவு, சிறந்த கல்வியாளர் விருது பெற்ற எஸ்.ஜான் சைமனை பாராட்டி பேசினார். விழாவில் தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணா சங்கரி குமரவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏர்னஸ்ட் பாஸ்கர் நன்றி கூறினார்.