அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையைத் திறக்கக் கோரி மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
மதுரை, ஆக. 5 - மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்து இயக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் செவ்வா யன்று (ஆக.5) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணே சன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ். கே. பொன்னுத்தாய், தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் என். பழனிச்சாமி, தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். பி. இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினர். ஆலையின் நிலவரம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. தென் தமிழ கத்தில் உள்ள ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலையான இது, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங் களில் உள்ள சுமார் 60,000 கரும்பு விவ சாயிகளுக்கு சேவை வழங்கி வந்தது. 2018-ல் போதிய கரும்பு இல்லை என்ற காரணத்தால் கரும்பு அரவை நிறுத்தப் பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளாக ஆலை மூடப்பட்டு உள்ளது. ஆலை புதுப்பிக்கப் படாத காரணத்தினால் இயந்திரங்கள் பழு தடைந்தன. ஆலையை புனரமைத்து இயக்குமாறு விவசாயிகள் பலகட்டப் போராட்டங்களை நடத்திவருகின்றனர். பெ.சண்முகம் பேச்சு இதனொரு பகுதியாகவே செவ்வா யன்று மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேசுகையில், “தென் தமிழகத்தில் உள்ள ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலை இது. மதுரை மாவட்டத்தின் விவசாயிகள் எல்லாம் இந்த கூட்டுறவு ஆலை செயல்பட வேண்டும் என்ப தற்காக தங்களுடைய பங்குத் தொகை களை செலுத்தி, அரசாங்கத்தின் பங்குடன் சேர்த்து இந்த ஆலை துவக்கப்பட்டது. இன்றும் ஏறத்தாழ 60 ஆயிரம் விவசாயிகள் இந்த ஆலையின் கூட்டுறவு உறுப்பினர்களாக இருக்கிறார்கள். திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் உட்பட கூட்டுறவு தேர்தலில் வாக்க ளித்து தங்களுக்கான இயக்குநர்களை தேர்வு செய்கிறார்கள். ஆலையை நவீனப்படுத்த வேண்டும் என்பதற்கான கோரிக்கையை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சி யாக வற்புறுத்தி வருகிறது” என்றார். நிதி ஒதுக்கீடு செய்க! “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளை யாட்டு அரங்கம் கட்ட 100 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள். ஒரே ஒரு நாள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு 100 கோடி ரூபாய் செலவு செய்தது அரசு. நாங்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர்கள் அல்ல; அதேவேளை ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை வழங்கக்கூடிய, ஆயி ரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ் வளிக்கக்கூடிய அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையைப் புதுப்பிக்க 50 கோடி ரூபாய் ஒதுக்க முடியாதா என்று கேட்கிறோம். 50 கோடி ரூபாய் என்பது அரசாங்கத்து க்கு பெரிய தொகை அல்ல. பல லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடுகிறது அரசு. ஐந்து லட்சம் கோடியில் ஒரு சிறுதொகை தான். இந்த 50 கோடி. தமிழ்நாடு அர சாங்கம் நினைத்தால் நாளையே அந்த 50 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, வரக்கூடிய ஆண்டிலேயே கரும்பு அரவை யைத் துவக்கலாம்” என்று குறிப்பிட்டார். கரும்பு விலை உயர்வு கோரிக்கை “2021 தேர்தலில் கரும்புக்கு டன்னுக்கு ரூபாய் 2,400 விலை வழங்குவோம் என்று திமுக வாக்குறுதி அளித்தது. இப்போது அதனை அமல்படுத்த உள்ளார்கள். இந்த காலத்தில் உற்பத்திச் செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. உரத்தின் விலை, பூச்சி மருந்தின் விலை, கூலி விலை, டீசல் விலை என்று உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், டன்னுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். சுவாமிநாதன் குழு பரிந்து ரையின் அடிப்படையில் உற்பத்தி செலவுக்கு மேல் ஒன்றரை மடங்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இணை மின்சாரத் திட்ட தாமதம் அலங்காநல்லூர் ஆலையில் 2012-ல் இணை மின்சாரத் திட்டப் பணிகளுக்காக மாநில அரசு டெண்டர் வழங்கியது. 18 மாதங்களில் பணியை முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த போதும், அது இன்று வரை முடிக்கப்படவில்லை. உரிய காலத்தில் திட்டம் நிறைவடைந்திருந்தால், ஆலை புதுப்பிக்கப்பட்டு, தென்மாவட் டங்களுக்கான முக்கிய சேவை மையமாக இருந்திருக்கும். 100 நாள் வேலைத் திட்டப் பிரச்சனை கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலை திட்டம் முக்கியமான வாழ்வாதாரம். ஆனால் ஒன்றிய அரசு இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. பல மாதங்களுக்கு சம்பளம் தராமல் கூலி பாக்கியை நிறுத்தி வைத்துள்ளது. புதிய நிபந்தனைகளை போட்டு பயனாளி களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது’’ என்றும் பெ.சண்முகம் தமது உரையின் போது கூறினார். மனு வழங்கல் ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய மனுவில், அலங்கா நல்லூர் ஆலையில் உறுப்பினராக உள்ள கரும்பு விவசாயிகள் பெரும்பாதிப்பை சந்தித்துள்ளதாகவும், பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாநில வேளாண்துறை அமைச்சர் சட்ட மன்றத்திலும், விவசாயிகள் ஆலோச னைக் கூட்டத்திலும் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித் திருந்தார். ஆனால் தற்போதுவரை எந்தவித மான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அருகிலுள்ள கரும்பு விவசாயிகளிட மிருந்து கரும்பு எடுக்க அனுமதி அளிக்கப் படும் நிலையில், கூட்டுறவு ஆலையில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் புறக்கணிக்கப் படுகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களுக்கு சேவை செய்யும் ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலை யாக உள்ள அலங்காநல்லூர் தேசிய கூட்டு றவு சர்க்கரை ஆலையை மாநில அரசு புதுப்பித்து செயல்படுத்த தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என்றும், மூடியுள்ள ஆலையை மீண்டும் திறக்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல் ராஜ், மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ். பாலா, தா. செல்லக் கண்ணு மற்றும் புறநகர், மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க உறுப்பினர்கள் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.