மருத்துவ வரலாற்றில் அதிநவீன முன்னோடியான அறுவை சிகிச்சை ரயில் விபத்தில் கைகளை இழந்தவர் மறுவாழ்வு பெற்றார்
சென்னை, அக்.13 - மருத்துவ வரலாற்றில் அதிநவீன முன்னோடியான அறுவை சிகிச்சை ஒன்றை சென்னையின் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒட்டு றுப்பு மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவக் குழு மேற்கொண்டு ள்ளது. உலகிலேயே மிகவும் அரிதான மறுசீரமைப்பு நுண் அறுவை சிகிச்சையான கைமாற்று கை இணைப்பு (Cross Hand Replantation) அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து சாதனை படைத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை முதன்முறை யாக ஒரு அரசு மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய அறுவை சிகிச்சை இந்தியாவில் இடம்பெறும் இரண்டாவது நிகழ்வும், உலகளவில் பதிவு செய்யப்பட்ட நான்காவது நிகழ்வும் ஆகும். பீகாரைச் சேர்ந்த 28 வயதான கைத்தொழிலாளி ஒருவர், செப்டம்பர் 25 அன்று பார்க் ரயில் நிலையம் அருகே ரயில் விபத்தில் சிக்கி, தனது இரு கைகளிலும் கடுமையான காயங்களுடன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அவரது இடது கை முழுமையாகத் தோள்பட்டை அருகே துண்டிக்கப்பட்டு, மீண்டும் இணைக்கக்கூடிய அளவில் முழுமையாக சிதைந்திருந்தது. இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் பேராசிரியர் மருத்துவர் சாந்தாராமன் மேற்பார்வையில், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைக் குழுவினரான பேராசிரியர் மருத்துவர் பி. ராஜேஸ்வரி, உதவிப் பேராசிரியர்கள் மருத்துவர்கள் ரஷீதா பேகம், வி.எஸ். வளர்மதி, வி. சுவேதா மற்றும் முதுநிலை மருத்துவர்கள் ஷோனு, அன்னபூரணி, விக்ரம், சி. சந்தோஷினி ஆகியோருடன் மயக்கவியல் மருத்துவர் ஜி. சண்முகப்ரியா ஆகியோர் தலைமையிலான குழு இணைந்து, இடது கையை வலது முழங்கையுடன் இணைக்கும் கைமாற்று கை இணைப்பு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதன்மூலம், குறைந்தபட்சம் ஒரு செயல்படும் கை மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது. இந்த 10 மணி நேரம் நீண்ட அறுவை சிகிச்சையில், எலும்புக் கட்டமைப்பு திருத்தம், தசை, நரம்பு மற்றும் ரத்தக் குழாய் இணைப்புகள் ஆகியவை மிக நுணுக்கமாகச் செய்யப்பட்டன. இரத்தக் குழாய் மறுசீரமைப்பு முடிந்தவுடனேயே கையின் ரத்த ஓட்டம் தொடங்கி, பொருத்தப்பட்ட கை வெற்றிகரமாக புத்துயிர் பெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டார். இணைக்கப்பட்ட கையில் நல்ல ரத்த ஓட்டமும் முன்னேற்ற மும் தொடர்ந்துள்ளது. அவர் முழுமை யான பயன்பாட்டை மீட்டெடுக்க, தீவிர இயன்முறை சிகிச்சை மற்றும் மனச்சிந்தனை மீள் பயிற்சிகள் தேவைப்படும் என மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். இதுபோன்ற சிகிச்சை உலகளவில் மிகவும் அபூர்வமானதும் சவாலானதும் ஆகும். இரு கைகளும் துண்டிக்கப்பட்ட சூழ்நிலையில், குறைந்தபட்சம் ஒரு கையாவது இருப்பது தினசரி செயல்களில் சுயமாக செயல்பட நோயாளிக்கு உதவியாக இருக்கும் என்பது உறுதி. இத்தகைய அறுவை சிகிச்சை ஒரு அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாகச் செய்யப்பட்டதன் மூலம், அரசு மருத்துவமனைகளில் இது போன்ற மிக நுட்பமான நுண் அறுவை சிகிச்சை மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை சாத்தியம் என்பதை நிரூபிக்கிறது. இந்த பெருமைமிகு செயல், இந்தியாவின் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். மிகவும் கடுமையான பாதிப்பிற்குப் பின்னர் கையின் வடிவம் மற்றும் செயல்பாட்டையும் மீட்டெடுக்கச் செய்த இம்முயற்சி, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைக் குழுவின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் மருத்துவச் சேவையின் உயர்தரத்தை வெளிக்காட்டுகிறது.