மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்துக்கு இனி திங்கள் கிழமை விடுமுறை
மாமல்லபுரம், ஆக. 12- மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்துக்கு வாரந்தோறும் திங்கள் விடுமுறை கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. மாமல்லபுரத்தின் மைய பகுதியில் உள்ள நீளமான பாறை மீது 138 ஆண்டு பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. இது, 84 அடி உயரத்தில் 93 படிக்கட்டுகளுடன் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1887ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. வங்கக்கடலில், பயணம் செய்யும் கப்பல்கள் மற்றும் படகுகள் இந்த வெளிச்சத்தை அறிந்து விலகிச் செல்லவும், கப்பல் மாலுமிகளுக்கு அடையாளம் காட்டவும் இந்த கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. இந்த, கலங்கரை விளக்கம் ஒன்றிய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த, கலங்கரை விளக்கத்தை சுற்றிப் பார்க்க தினமும் ஏராளமானோர் வருகின்றனர். இதனை, சுற்றிப் பார்க்க பெரியவர்களுக்கு 10 ரூபாயும், சிறுவர்களுக்கு 5 ரூபாயும், வெளிநாட்டினருக்கு 25 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்
சென்னை, ஆக. 12- நாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களையொட்டி, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரமும், சர்வதேச விமான பயணிகள் மூன்றரை மணி நேரம் முன்னதாக வருவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் காலணிகள், பெல்ட்டுகள், குளிருக்கு அணியும் ஜாக்கெட்டுகள் ஸ்கேன் மூலம் சோதனை செய்யப்படும். திரவப் பொருட்கள், ஜாம், அல்வா, ஊறுகாய் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள விமானநிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரயில், பேருந்து நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதோடு விமான நிலைய வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் சக்தி வாய்ந்த லேசர் லைட்டுகளை உபயோகப்படுத்துவதற்கும் மற்றும் காஸ் நிரப்பிய பலூன்களை பறக்க விடுவதற்கும், ஏற்கெனவே சென்னை மாநகர காவல் ஆணையரகம் தடைவிதித்துள்ளது. அந்த தடையை 100 விழுக்காடு முழுமையாக அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை விமானநிலையம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்புகளுடன் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அச்சப்பட வேண்டியது இல்லை. வழக்கம்போல் தங்கள் விமான பயணத்தை மேற்கொள்ளலாம். அதே நேரத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் நடத்தும் கூடுதல் பாதுகாப்பு சோதனைகளுக்கு, பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
செப்.7 முழு சந்திர கிரகணம்: சென்னையில் முழுமையாக தெரியும்
சென்னை, ஆக.12- வருகிற செப்டம்பர் 7அன்று முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதை சென்னையில் உள்ளவர்கள் வெறும் கண்களால் பார்க்கலாம். சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது ஏற்படுகிறது. பூமி, சூரிய ஒளியை சந்திரன் மேல் விழாமல் தடுப்பதால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதை ரத்த நிலவு என்றும் சொல்வார்கள். செப்டம்பர் 7 இரவு 8.58 மணிக்கு தொடங்கும் கிரகணம் 8-ந் தேதி அதிகாலை 2.25 மணி வரை தெரியும். இதை எந்த வித கருவிகளும் இன்றி வெறும் கண்களாலேயே பார்க்கலாம். குறிப்பாக சென்னையில் உள்ளவர்கள் கிழக்கு நோக்கி வானத்தை பார்த்தாலே போதும் முழு சந்திர கிரகணத்தை பார்த்து ரசிக்கலாம். பூமியின் லேசான நிழலுக்குள் சந்திரன் நுழையும் கட்டத்தை பெனும்பிரல் என்று அழைக்கிறார்கள். அதில் தொடங்கி கிரகணம் மேலும் வளர்கிறது. இதை காண்பதற்கு மட்டும் தொலைநோக்கி தேவைப்படலாம். பூமியின் மைய இருண்ட பகுதியான அம்ப்ரா சந்திரனை மறைக்கத் தொடங்கி முழுமை அடையும் போது சந்திரன் சிவப்பு நிறத்தில் ஒளிரத் தொடங்கும். இரவு 11.41 மணிக்கு முழுமையான சந்திர கிரகணம் நிகழும். இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 12.22 மணி வரை, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அலாஸ்கா, தென் அமெரிக்காவின் கிழக்கு பகுதி மற்றும் உலகின் பெருங்கடல்கள் மற்றும் துருவப் பகுதிகள் முழுவதும் இந்த நிகழ்வு தெரியும். அடுத்த முழு சந்திர கிரகணம் 2026-ம் ஆண்டு மார்ச் 3 அன்று நிகழ உள்ளது. ஆனால் அதை சரியாக பார்க்க முடியாது. அதன் ஒரு பகுதி மட்டுமே இந்தியாவில் தெரியும். ஏனென்றால் சந்திர கிரகணம் நிகழ்ந்து முடியும் நேரத்தில்தான் இங்கு நமக்கு சந்திரன் உதிக்கும். இவ்வாறு தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சவுந்தரராஜ பெருமாள் கூறியுள்ளார்.