சென்னை, ஏப். 21 - தமிழக அரசின் வருவாயில் 5ல் ஒரு பங்கை ஈட்டும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடை ஊழியர்களை பணி வரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தராசன் வலியுறுத்தி யுள்ளார். 19 ஆண்டுகாலமாக பணியாற்றி வரும் டாஸ்மாக ஊழியர்கள் கால முறை ஊதியம் கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்ற னர். இதன் தொடர்ச்சியாக வியாழ னன்று (ஏப்.21) சென்னையில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில், விற்பனை குறைவாக உள்ள கடைகளில் அதிக ஊழியர்களும், விற்பனை அதிகம் உள்ள கடைகளில் குறைவான ஊழியர்களும் உள்ளதை பணி நிரவல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது. இந்த போராட்டத்தினிடையே செய்தியாளர்களிடம் பேசிய அ.சவுந்தரராசன்
, “டாஸ்மாக் ஊழியர்களுக்கு 14 முறை ஊதிய உயர்வு அளித்தும் கூட, அரசின் பிற விற்பனை பிரிவு ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை எட்டவில்லை. டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர்கள், அலுவலக சிபாரிசுகள் என்ற பெயரில் செய்யப்பட்ட முறை யற்ற பணியிட மாறுல்தகளை ரத்து செய்ய வேண்டும். விற்பனை அடி ப்படையில், சுழற்சிமுறையில் பணியிட மாறுதல் கொள்கையை உருவாக்க வேண்டும். அதனடிப்படையில் வெளிப்படையான பணியிட மாறுதலை மேற்கொள்ள வேண்டும்” என்றார். “டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தவும் நேர்மையான, வெளிப்படையான செயல்பாட்டை நிலைநாட்டவும் நிரந்தர அதிகாரி களை நியமிக்க வேண்டும். விற்ப னையை முறைப்படுத்தி கணினி மயமாக்கப்படும் பார்கோடிங் பில்லிங் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அறிவித்து, முதல மைச்சர் நிறைவேற்ற வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏராளமான தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து உள்ளார். அவற்றை நிறைவேற்றி வரும் முதலமைச்சர், டாஸ்மாக் ஊழியர்க ளும் பயனடையும் வகையில் முடிவு எடுக்க வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்றும் அவர் எச்சரித்தார்.
பேச்சுவார்த்தை
இந்த பேரணிக்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன (சிஐடியு) தலைவர் கே.திருச்செல்வன் தலைமை தாங்கினார். பி.வி.கதிரவன் (அகில இந்திய பார்வர்ட் பிளாக்) மற்றும் ஏஐசிசிடியு, டியுசிசி, டிடிபிடி எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் உள்துறைச் செயலா ளர் எஸ்.கே.பிரபாகரை, கூட்டமைப் பின் நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.